பெரியார் பிம்பத்தை உடைப்பவர் யாராக இருந்தாலும், அதை நாங்கள் சரி என்று சொல்வோம் என்று சீமானுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் இன்று (ஜனவரி 13) பொங்கல் கொண்டாடினார்.
திமுக தகுதி இழந்துவிட்டது!
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “பணப்பரிசோடு தான் இந்த பொங்கல் ஆரம்பித்திருக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் கூடுதல் பணப்பரிசு வழங்க கோரிய திமுக, தங்கள் ஆட்சியில் பொங்கல் பரிசாக இந்தாண்டு ரூ.1000 கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு ரூபாய் கூட அவர்கள் தரவில்லை. இது கண்டிக்கத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை திமுக நியாயமாக நடத்தாது என்பதால் நாங்கள் (பாஜக) தேர்தலை புறக்கணிக்கிறோம். திமுகவை அனைத்து அரசியல் கட்சிகள் புறக்கணித்து இருக்கிறது. தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ளும் தகுதியை திமுக இழந்துவிட்டது. 2026 தேர்தலில் மக்களால் திமுக புறக்கணிக்கப்படும்.
ஆளுநர் – முதல்வர் மோதல் விவகாரத்தில் இருவரும் நேரில் சந்தித்து, மாநில பிரச்சனைகளை விவாதித்து தீர்வு காண வேண்டும் என்று என பொங்கல் கோரிக்கையாக வைக்கிறேன். இரண்டு மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றி இருக்கிறேன் என்று முறையில் இந்த கோரிக்கையை வைக்கிறேன்” என்றார்.
சீமானுக்கு வரவேற்பு!
தொடர்ந்து அவர், ”பெரியார் பிம்பத்தை உடைப்பவர் யாராக இருந்தாலும், அதை நாங்கள் சரி என்று சொல்வோம். சீமான் எங்கள் (பாஜக) பி டீம் இல்லை. அவர் எங்கள் தீம்(கருத்தியல்) பார்ட்னர்.
சீமான் பெரியாரை பற்றி பேசிவரும் கருத்துக்களை தான் பாஜக நீண்ட வருடங்களாக தெடர்ந்து பேசி வருகிறது. சீமான் பேசும் கருத்துக்கள் பாஜகவினர் பேசும் கருத்துக்கள் தான். எங்களுடைய கருத்தியல்களை சீமான் தற்போது பேசி வருகிறார். அதை வரவேற்கிறோம்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஈபிஎஸ் முதல் ரஜினி வரை : வாழ்த்து மழையில் அஜித்
முதல்வருக்கு ஆணவமா? : ஆளுநருக்கு தக் ரிப்ளை கொடுத்த துரைமுருகன்
48வது சென்னை புத்தகத் திருவிழா நிறைவு : புதிய உச்சம் தொட்ட விற்பனை!