அறநிலையத்துறையின் இடமாகவே இருந்தாலும், மக்களின் வாழ்விடத்தை அப்புறப்படுத்துவது அவசியமற்றது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் வெண்ணைய்மலை பகுதியில் பால சுப்பிரமணிய சுவாமிக்கு சொந்தமான இடங்களில் மூன்று தலைமுறையாக வசிக்கின்ற மக்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
இதற்கிடையே கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் இன்று (அக்டோபர் 21) கலந்துகொள்வதற்காக ஏற்கெனவே கரூர் சென்றுள்ள சீமான் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கிறார்.
அவர் இன்று வெண்ணெய்மலை பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்திக்க உள்ளதாக தகவல் பரவியது.
இதனையறிந்த காவல்துறை, வெண்ணெய்மலை சென்று பொதுமக்களை சந்திக்க சீமானுக்கு தடை விதித்தனர். அவர் தங்கியிருந்த தனியார் விடுதி முன்பு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும் கோயில் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும், தற்போது சென்று மக்களை சந்தித்தால் தேவையற்ற குழப்பம் ஏற்படும் என கூறி போலீசார் தரப்பில் சீமானிடம் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சீமானை சந்தித்து தங்களது பிரச்சனையை கூற விடுதி முன்பு குவிந்திருந்த பொதுமக்களையும், நாதக கட்சியினரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், போலீசாரின் அனுமதியுடன் தனியார் விடுதி வாயிலில் பொதுமக்களை சந்தித்து சீமான் பேசினார்.
அப்போது அவர், “உங்களுடைய அச்சம் தேவையற்றது. இங்கு மட்டுமல்ல சென்னையிலும் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பொதுமக்களை அவர்களது வசிப்பிடத்திலிருந்து அகற்றுவது தொடர்ந்து வருகிறது.
அரசு கோயில் நிலம் என்கிறது. மக்கள் தான் கோயிலுக்கு இடம் வழங்கியுள்ளார்கள் என்பதை ஆட்சியாளார்கள் உணர வேண்டும்.
மக்களுக்கு தான் முதலில் இடம் தேவை. அது போகத் தான் மீதி. அறநிலையத்துறை வாக்களித்த ஆயிரக்கணக்கான மக்களின் மன உணர்வுக்கு மதிப்பளித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.
அதையும் மீறி அகற்ற வேண்டும் என நினைத்தால் எங்களின் போராட்டத்தை சந்திக்க நேரிடும். அதற்கு எங்களை தள்ளிவிடாதீர்கள்.
மக்களின் கண்ணீரைப் பார்த்து ஆண்டவனே இரங்கும்போது, ஆட்சியாளர்கள் இரங்கவில்லை என்றால், அந்த ஆட்சியை இறக்குவதை தவிர வேறு வழியில்லை.
விமான நிலையத்திற்கு நீங்கள் ஆக்கிரமித்த இடங்களை விடவா, இந்த மக்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள்? அறநிலையத்துறையின் இடமாகவே இருந்தாலும், மக்களின் வாழ்விடத்தை அப்புறப்படுத்துவது அவசியமற்றது” என சீமான் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அம்மாவில் நடக்கும் பிரச்னைகளை மோகன்லால் நன்கு அறிந்தவர் : நடிகை மல்லிகா சுகுமாறன்
“திமுக கூட்டணி உடையுமா?” : எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில்!