லட்சியத்தோடு இருக்கும் என்னிடம் இரண்டு லட்சுமிகளை வைத்து சண்டை போடுகிறார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில் உதகையில் இன்று (செப்டம்பர் 2) சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜயலட்சுமி தொடர்ந்து புகார் அளித்து வருகிறார். என்ன நடந்தது என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “ஏதாவது நடந்திருந்தால் தானே சொல்வதற்கு. நீங்கள் சட்டப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால் அதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன். நான் கோடி கனவுகளுடன் ஓடிக் கொண்டிருப்பவன். உயர்ந்த கருத்தியலை வைத்து கொண்டு ஒரு பெருங்கனவை வைத்து கொண்டு இந்த களத்தில் அரசியல் செய்ய வந்தவன் நான்.
நான் கருணாநிதி மகனோ, ஸ்டாலின் மகனோ, அல்லது எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை கைப்பற்றி வந்தவனோ இல்லை. 50 ஆண்டுகள் நடித்து ரசிகர்களை தொண்டர்களாக்கி வந்தவனும் இல்லை.
நாம் தமிழர் என்ற கட்சி கருவறையில் இருந்து பிறக்கவில்லை, பிணவறையில் இருந்து வருகிறது. அந்த வலியோடு ஓடிக் கொண்டிருக்கின்ற போது அரசியலில் நான் எடுத்து வைக்கின்ற கருத்தை எதிர்கொள்ள வேண்டும். அதைவிட்டு அவதூறால் எதிர் கொள்ள கூடாது. நீங்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக நிற்கிறீர்கள். ஆனால் நான் இதுவரை எந்த தேர்தல் களத்திலாவது நான் கூட்டணி வைத்திருக்கிறேனா. தனித்து தான் சண்டைக்கு நிற்கிறேன். நேருக்கு நேர் என்னோடு மோத வராமல் இரு பெண்களை இருட்டில் இருந்து ஏவி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நான் உயர்ந்த லட்சியத்தை தூக்கிக் கொண்டு வருகிறேன். நீங்கள் இரண்டு லட்சுமியை தூக்கிக் கொண்டு வந்து சண்டை போடுகிறீர்கள். அரசியல் களத்தில் என்னை வீழ்த்துவதற்குக் கையில் எடுத்துள்ள கருவி மிகவும் கேவலமானது.
13 ஆண்டுகளாக இதே பிரச்சனையை தேர்தல் வரும்போது மட்டும் பேசிக் கொண்டிருந்தால் அரசியல் பின்னணி இல்லாமல் இவர்கள் பேசுவார்களா? நான் அமைதியாக இருப்பதால் அந்த பெண் சொல்வது எல்லாம் உண்மை என்று எடுத்துக் கொள்ள கூடாது. அமைதியாக இல்லாமல் ஒரு நாள் நான் வெடித்து சிதறி விட்டேன் என்றால் ஒருத்தனும் தலைகாட்ட முடியாது. காலையில் செய்தியாளர் சந்திப்பு மாலையில் கூட்டம் என்று பேசிக் கொண்டிருப்பதால் என்னை சமாளிக்க முடியவில்லை. அதனால் தான் டேக் டைவர்ஷன் எடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும், “விஜயலட்சுமியாவது என் கூட ஒரு படத்தில் நடித்தார். அவரோடு வீரலட்சுமி வருகிறாரே ஏன்? அவருக்கு என் மீது எரிச்சல், காழ்ப்பு இருக்கிறது. ஒரு தமிழன் வளர்வதில் ஏறிப் போவதில் தமிழர் அல்லாதவர்களுக்கு எரிச்சல் இருக்கிறது. அதனால்தான் நான் என் பணியை தொடர்ந்து செய்கிறேன். அந்த விஜயலட்சுமி இதுபோல மேலும் பலர் மீது புகார் அளித்திருக்கிற ஆவணங்கள் என்னிடம் உள்ளன” என்ற சீமான்… கர்நாடகாவில் நடிகரும் பாஜக எம்.பி.யுமான ஜெகதீஷ் என்பவர் மீது விஜயலட்சுமி இதேபோல கொடுத்த புகாரின் வீடியோவை ஓடவிட்டார். அந்த வீடியோவில் விஜயலட்சுமி கன்னட மொழியில் ஜெகதீஷ் மீது புகார் சொல்கிறார்.
“இதேபோல அவர் இன்னும் பலர் மீது புகார் கூறியதற்கான ஆவணங்கள், கடிதங்கள் இருக்கின்றன” என்று கூறினார் சீமான்.
மோனிஷா
அரக்கன் ‘மேக்ஸ்’: சுதீப் பிறந்தநாளன்று வெளியான டீசர்!
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது!
எப்புட்ரா!?
சறுக்கு மரத்தில கூட சாஞ்சிகிட்டே ஓடுர!?🏃🏃🏃🏃