கல்வி விருது விழா நடத்தி மாணவ மாணவிகளுக்கு இன்று (ஜூன் 28) ஊக்கத்தொகை வழங்கி வரும் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும், முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டு விழா நடத்தினார்.
அது போலவே இந்த ஆண்டும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து 2 கட்டங்களாக பாராட்டு விழா நடத்த திட்டமிட்டார்.
அதன்படி முதற்கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விஜயின் இந்த செயலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை. கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை!
ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது.
‘பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை – பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ – மாணவியரை அழைத்து,
பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்” என சீமான் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
‘கள்ளச்சாராய மரணத்தில் கபட நாடகம்’ : எடப்பாடியை அட்டாக் செய்த கருணாஸ்