seeman condemns the karnataka's funeral protest

ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம்… சீமான் கண்டனம்!

அரசியல்

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு கர்நாடகா இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவுகிறது.

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் படி தினமும் வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 21-ம் தேதி உத்தரவிட்டது.

எனினும் இதற்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த கன்னட மற்றும் விவசாய அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று(செப்டம்பர் 26) மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

அதன்படி  கர்நாடகா மாநிலம் ராமநகரில் நடந்த போராட்டத்தில், கர்நாடக பாதுகாப்பு வேதிகே அமைப்பு சார்பில் நடந்த போராட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது உருவப்படத்திற்கு பொட்டு வைத்தும், மாலை அணிவித்தும் இறுதிச்சடங்கு செய்தனர்.

இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீமான் ஆவேசம்!

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவுபடி திறந்துவிடும் சொற்ப நீரையும் திறக்கக் கூடாது என கன்னட அமைப்புகள் போராடி வருவது சிறிதும் மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலாகும். போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு இறுதிச் சடங்குகள் செய்து அவமதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

அரை நூற்றாண்டு காவிரி உரிமை சட்டப்போராட்டத்தில், வரலாறு நெடுகிலும் தமிழ்நாடு காவிரி நதியில் தமக்குள்ள நீர் உரிமையை இழந்தே வந்துள்ளது. கீழ்ப்படுகை நாடுகளுக்கான பங்கு உலகெங்கும் குறைக்கப்பட்டதே இல்லை.

ஆனால் சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்கு படிப்படியாகச் சட்டத்தின் பெயராலேயே குறைக்கப்பட்டது. இத்தனை துரோகங்களுக்குப் பிறகும், இறுதித் தீர்ப்பு அடிப்படையில் வழங்கப்பட்ட குறைந்தபட்ச காவிரி நீரைக்கூட சட்டப்படி அமைக்கப்பட்ட மேலாண்மை ஆணையம் மூலம் கர்நாடகத்திடம் கெஞ்சிக் கேட்டும் பெறமுடியவில்லை என்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம்.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீரப்பையே செயல்படுத்த முடியவில்லை என்றால் இதுதான் இந்தியாவின் ஒருமைப்பாடா? தன்னிச்சை அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தைக்கூட முறையாகச் சட்டப்படி இயங்கச் செய்து நீரினை பெற்றுத்தர முடியவில்லை என்றால் ஒன்றிய அரசு என்ற ஒன்று இந்த நாட்டிற்கு எதற்கு? இதுதான் இந்தியாவின் கூட்டாட்சி முறையா? தமிழர்கள் இந்த நாட்டின் குடி மக்களா இல்லையா?

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே தேர்தல், ஒரே சட்டம் என்று ஒற்றைமயமாக்கல் பேசும் பாஜக, ஒரே நாட்டிற்குள் இருக்கும் கர்நாடகத்திடம் காவிரி நீரைப் பெற்றுத் தராதது ஏன்? தேசிய ஒருமைப்பாடு பேசும் காங்கிரசு கட்சி பெற்றுத்தருமா? கர்நாடவில் காங்கிரசு அரசு அமையப் பாடுபட்ட திமுக, சித்தரமையா அரசிடம் பேசி காவிரி நீரைப் பெற்றுத்தருமா?

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தேர்தல் அறிக்கையிலேயே 9000 கோடி ரூபாய் ஒதுக்குவதாகக் காங்கிரசு கட்சி அறிவித்ததை அறிந்திருந்தும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் காங்கிரசு கட்சிக்கு ஆதரவாகப் பரப்புரை செய்து தமிழ்நாட்டு விவசாயிகளுக்குப் பச்சைத்துரோகம் புரிந்தன.

அதற்கான எதிர்விளைவை இன்றைக்கு திமுக அரசு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடே அனுபவிக்கிறது. அதன் உச்சமாக, கன்னட இனவெறியர்கள் கர்நாடாகாவில் வாழும் தமிழர்களின் கடைகளை காலி செய்யுமாறும், கர்நாடகாவை விட்டு வெளியேறுமாறும் தமிழர்களை மிரட்டுவதும், தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதையும் கர்நாடகத்தை ஆளும் காங்கிரசு அரசும், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது.

கர்நாடக அமைப்புகள் குறைந்தபட்ச மனித மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும். அறவழியில், அமைதியான முறையில் தங்களது எதிர்ப்புணர்வை தெரிவிக்க அனைவருக்கும் முழு உரிமையும் உண்டு. ஆயிரம் கருத்து முரண்கள், அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும், சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர், எட்டு கோடி தமிழ் மக்களின் அரசப் பிரதிநிதியாவார்.

எனவே, தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் கன்னட அமைப்புகள் அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பதிலுக்கு கர்நாடக முதலமைச்சரை அவமதிக்க ஒரு நொடி ஆகாது. எனினும் தமிழரின் மாண்பு அத்தகைய இழிசெயலில் ஈடுபட அனுமதிக்காது.

ஆகவே, இனியும் தமிழர்களை அச்சுறுத்தி, தமிழ்நாடு அரசினையும், முதலமைச்சரையும் அவமதிக்கும் கன்னட இன வெறியர்களின் செயலை தடுத்து நிறுத்துவதோடு, உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நதிநீரை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் கர்நாடக அரசையும், இந்திய ஒன்றிய அரசையும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ராணுவ வீரரை கைது செய்த கேரள போலீசார்: பின்னணி என்ன?

தங்கத்தை குறி வைக்கும் ஷூட்டர்: யார் இந்த ரமிதா ஜிண்டால்?

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *