பெரியாரா? பிரபாகரனா? – மோதிப் பார்ப்போம்… சீமான் சவால்!

Published On:

| By Selvam

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைக் கண்டித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் இன்று (ஜனவரி 22) நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பெரியார் பேசிய கருத்துக்களை தான் நான் சொன்னேன். அதில் தவறு இருந்தால் பெரியார் தான் பொறுப்பேற்க வேண்டும். என் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் காண்பிப்பேன்.

பெரியாரை அதிகமாக விமர்சித்தது திமுக தான் என்று திருமுருகன் காந்தி பேசியிருக்கிறார். அவருக்கு என் தம்பி தங்கைகள் பதிலளிப்பார்கள்” என்றார்.

தொடர்ந்து, சீமான் பிரபாகரனுடன் இருக்கும் போட்டோவை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பேசியதற்கு பதிலளித்த சீமான்,

“பிரபாகரனுடன் நான் எடுத்த போட்டோவை சங்ககிரி ராஜ்குமார் வெட்டி ஒட்டி கொடுக்க வேண்டிய தேவையென்ன? வன்னியருக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை நான் ஆதரித்து பேசும்போது, அண்ணா வன்னிய மக்கள் கூட இருங்கள் விட்ராதீங்க என்று பேசினார். சங்ககிரி ராஜ்குமார் வெங்காயம் படம் எடுத்ததால், வெங்காயங்களுக்கு ஆதரவாக இப்போது பேசுகிறார். அவர் என்ன வி.டி. விஜயனா? ஸ்ரீகர் பிரசாத்தா?

பிரகாரனுடன் எடுத்த படம் முதன் முதலில் ஆனந்த விகடனில் வெளிவந்தது. 15 வருடங்களாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார். அப்போதே இதை சொல்லியிருக்கலாமே? பெரியார் குறித்து நான் பேசியதும் பிரபாகரனுடன் எடுத்த படம் பொய் என்று சொல்கிறார்கள். பெரியாரா? பிரபாகரனா? என்று மோதி பார்த்துவிடுவோம்” என்று சீமான் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share