அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும், ஆட்சி செய்தவர்கள் மீதும் உள்ள சொத்து, ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட வேண்டும் என்று சீமான் சவால் விடுத்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஏப்ரல் 14) மதுரைக்கு வந்தார்.
தொடர்ந்து அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பெருங்குடி அருகே உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், திமுகவினரின் சொத்துப்பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், “அண்ணாமலையின் அறிவிப்பை வரவேற்கிறேன். அதேவேளையில் இது ஒன்றும் புதிதல்ல. திமுகவிற்கு எவ்வளவு சொத்து உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தான் முக்கியம்.
அண்ணாமலை திமுக பட்டியலை வெளியிட்டதால் அதிமுகவில் இருப்பவர்கள் எல்லோரும் புனிதர்கள் ஆகிவிட முடியாது. அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் வாயை மூடிக்கொண்டு அவர் அமைதியாக இருக்கக்கூடாது.
நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும், ஆட்சி செய்தவர்கள் மீதும் உள்ள சொத்து, ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட வேண்டும்.
ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை, ஊழல் செய்த கட்சிகளோடு இனி கூட்டணி கிடையாது என்ற அறிவிப்பையும் வெளியிடவேண்டும்.” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
மோசடி புகாரை திசைதிருப்பும் அண்ணாமலை: திமுக தலைவர்கள் குற்றச்சாட்டு
பஞ்சாப் துப்பாக்கிச்சூடு… ராணுவ மரியாதை: உறவினர்கள் போராட்டம்!