சீமானுக்கு எதிரான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன் என காவல்துறை விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 20) உத்தரவிட்டுள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரை அப்போதே வாபஸ் வாங்கிய நிலையில் தற்போது மீண்டும் சீமான் புகார் மீது புகார் கொடுத்திருந்தார் விஜயலட்சுமி.
திருமணம் செய்து கொள்வதாக கூறி 7 முறை சீமான் கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி மீண்டும் செப்டம்பர் 16 ஆம் தேதி இரவோடு இரவாக புகாரை வாபஸ் பெற்றார்.
இதனிடையே தன் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரியும், இந்த வழக்கை முடித்து வைக்க கோரியும் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில்,
“கடந்த 2011ஆம் ஆண்டு அளித்த புகாரை திரும்பப்பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும்,
விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துகள் கூறி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2011-ல் முடிக்கப்பட்ட வழக்கை 12 ஆண்டுகளுக்குப் பின், அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிப்பதால், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சீமான் தரப்பில், “நடிகை விஜயலட்சுமி 2011-ல் அளித்த புகாரை 2012 ஆம் ஆண்டு திரும்பப் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு அதே குற்றச்சாட்டுகளுடன் புதிதாக புகார் அளித்து விட்டு அதையும் ஒரு மாதத்திற்குள் திரும்பப் பெற்று விட்டார்.
ஆனால் காவல் துறை தரப்பில் இந்த புகார் தொடர்பான ஆவணங்களையும் நகல்களையும் வழங்கவில்லை. அதனை வழங்குவதற்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, புகார் மனுக்களை சமர்பிப்பதற்கு அவகாசம் வேண்டும் என்று காவல் துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
காவல்துறையின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி செப்டம்பர் 26 ஆம் தேதிக்குள் விஜயலட்சுமி அளித்த புகார் மற்றும் வாபஸ் பெற்ற விவரங்களை பதில் மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
குறிப்பாக சீமான் மீதான வழக்கை 11 ஆண்டுகளாக முடித்து வைக்காமல் நிலுவையில் வைத்திருந்தது ஏன் எனவும் விளக்க அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
மோனிஷா
சென்னை – நெல்லை வந்தே பாரத் எப்போது?
பெரியார் சிலை மீது சாணம் வீச்சு: குவியும் கண்டனங்கள்!