நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி ‘மைக்’ சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மார்ச் 27) தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறை அந்த சின்னம் ஒதுக்கப்படவில்லை. பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது.
இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. சின்னம் தொடர்பாக சீமான் தரப்பு தேர்தல் ஆணையத்தில் தாமதமாக விண்ணப்பித்ததால், விவசாயி சின்னத்தை ஒதுக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் பதிலளித்தது.
இந்தநிலையில், ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது. ஆனால், இதனை ஏற்காத நாம் தமிழர் கட்சி படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை அணுகியது. நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி ‘மைக்’ சின்னத்தில் போட்டியிடும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. கடந்த காலங்களில் நாங்கள் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த சின்னத்தை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று இறுதி வரை போராடினோம். அது சரியாக வரவில்லை.
சின்னத்தை இழந்தாலும் நம் எண்ணத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக மைக் சின்னத்தை விட ஒரு சிறந்த சின்னம் இல்லை என்பதால் ‘மைக்’ சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
விவசாயி சின்னத்தை நான் கேட்கவில்லை, தேர்தல் ஆணையம் தான் ஒதுக்கியது. ‘மைக்’ சின்னத்தையும் நான் கேட்கவில்லை, ஆணையம் தான் ஒதுக்கியது. எனக்கு எது சரியாக இருக்கும் என்பது என்னை விட தேர்தல் ஆணையம் நன்றாக முடிவு எடுக்கிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் எப்போது? – முழு விவரம் இதோ!
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்காதது ஏன்? – தேர்தல் ஆணையம் விளக்கம்!