முரளி சண்முகவேலன்
லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்
இந்தச் சிறப்புப் பத்தியின் மையத் திரியானது பிரிட்டனின் காலனியம் எம்மாதிரியான பாதிப்புகளைத் தொடர்ந்து நம்முள் ஏற்படுத்தி வருகிறது என்பது பற்றியதாகும். அமெரிக்க ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த (முன்னாள்) நடிகரான மேகன் மெர்க்கிள் ‘இளவரசர்’ ஹாரியை மணந்தபோது பிரிட்டன் இன அரசியலைக் கடந்துவிட்டதாகப் பொதுதளத்தில் எழுப்பப்பட்ட ஆரவாரத்தின் பின்னணியில் இப்பத்தி தொடங்கியது. பிரிட்டனில் உள்ள கறுப்பின மக்களில் ஒரு சாரார் ‘மேகன் அமெரிக்க ஆப்பிரிக்கப் பெண்ணியவாதி’, எனவே அரச குடும்பத்தில் பெண்ணியம் பேசும் ஒரு கறுப்பினப் பெண் குடியேறுவதை 21ஆம் நூற்றாண்டின் இன சமத்துவத்தை நிலை நிறுத்தும் ஒரு பெரு நிகழ்வாகப் பார்த்தனர். இப்பத்தியின் நோக்கம் இன சமத்துவமின்மை என்பது வரலாறு அல்ல; அது பல வடிவங்களில் இன்றும் தொடர்ந்துவருகிறது என்பதை அறியும் ஒரு சிறிய முயற்சி.
இதன் பின்னணியிலேயே மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட கரிபீயக் கறுப்பர்களின் வாழ்வு இன்றளவும் நிலையற்று இருப்பதைப் பார்த்தோம். பிரிட்டனில் உள்ள கரிபீயக் கறுப்பர்களின் நிலையை அரசியல், இலக்கியப் பிரதிகளாக்கி அதை ஒரு விவாதப் பொருளாக மாற்றியதில் இரண்டு தமிழர்களுக்குப் பங்குள்ளதையும் நான் குறிப்பிட்டேன். சாம் செல்வன், சிவா என்ற சிவானந்தன் இருவரின் பங்கும் மிகவும் குறிப்பிடத்தக்கது. சாம் செல்வனின் பங்களிப்பு இலக்கியம் மற்றும் அது குறித்த அரசியல் பற்றியதாக இருந்தது. குறிப்பாக செல்வனின் நாட்டு மொழி (Creolised English) என்ற பாணி பின்னாளில் பிரிட்டனில் வாழும் (குறிப்பாக கிழக்கு லண்டனில்) கறுப்பர்களின் கலாச்சார அடையாளமாகியது குறிப்பிடத்தக்கது.
சிவாவின் பங்களிப்புகளோ அரசியல், அறிவுஜீவிகளின் தளத்தில் அமைந்ததாக உள்ளது. இப்பார்வையைச் சிங்களவர்களின் காலனிய வெறுப்பு அரசியலில் இருந்து பெற்றதாக சிவா குறிப்பிடுகிறார். செல்வனின் பங்களிப்பில் அவரது தமிழ் அடையாளத்திற்கு ஒரு சிறு பங்குகூடக் கிடையாது. செல்வன் தன்னைக் கறுப்பர்களின் பிரதிநிதியாகவே முன்னிறுத்துகிறார். செல்வனின் நாட்டு மொழிப் பாணி மேற்கிந்தியக் கறுப்பர்களின் பாணியே. அதுவே அவரது தாய்மொழி. சிவா தனது தமிழ் அடையாளத்தில் இருந்தும், இலங்கையின் நடைபெற்ற அடக்குமுறை அரசியலிலிருந்து தனது இன சமத்துவம், காலனிய அரசியலுக்கு எதிரான பார்வைகளை முன்வைக்கிறார்.
சிவாவைப் பொறுத்தவரையில் இலங்கையில் நடைபெற்ற அடக்குமுறைகளும் வன்முறைகளும் சிங்களவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பது உண்மைதான். ஆனால், தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்னும் இனவெறிப் போக்கு பிரிட்டனின் காலனியத்தில் தொடங்கியது என்பது சிவாவின் வாதம். இதற்கான உதாரணம் அவரது வாழ்விலேயே இருந்ததைக் குறிப்பிடுகிறார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மலையகத்திற்குச் சென்று தமிழ் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கச் சென்றபோது ‘தமிழன் என்ற உணர்வும் தமிழன் என்ற பிரக்ஞையும் தனக்குச் சுத்தமாக இல்லை’ என்பதும், கொழும்பில் வாழ்ந்த தனது மகள் தமிழர்களை ஒதுக்கி வைக்கும் சிங்களவர்களின் பொது புத்தியைக் கொண்டிருந்ததையும் பின்னாளில் பதிவு செய்துள்ளார். கொழும்பு நகரத்தில் சிங்களவர்களாக மனதளவில் வாழ்ந்து வந்த சிவாவுக்கு தமிழர்கள் குறித்த பிரக்ஞை இல்லாததும் அவரது மகளுக்குத் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற மனநிலைக்கான காரணம் காலனியத்தின் தொடர்ச்சியே என்பது அவரது பார்வையாகும். சிங்கள அரசின் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளிலும் காலனிய உத்தி இருந்ததைக் குறிப்பிடுகிறார்.
உதாரணமாக 1949ஆம் ஆண்டில் டட்லி சேனநாயகே எடுத்த முடிவு: மலையகத் தமிழர்கள் மூன்று நான்கு தலைமுறைகளாக இலங்கையில் வாழ்ந்து வந்த போதிலும், தங்களைக் குடிகளாக அரசிடம் பதிவு செய்யாத தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்ற திடீர் பாசிசச் சட்டம் தமிழர்களைக் காலனிய அடிமைகளாக்கும் சூழ்ச்சியாகவே சிவா பார்த்தார். இதே முறையையே இந்திய அரசாங்கம் அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கடைப்பிடிப்பதும் காலனிய உத்தியே. வெள்ளையர்கள் ஆட்சி மட்டுமே காலனியம் அல்ல: அவர்கள் வெளியேறிய பின் காலனிய அதிகாரம் பல வடிவங்களில் உள்ளூர் அதிகாரத்தில் இருப்பவர்களின் கரங்களில் செயல்படுகிறது.
இப்படிப்பட்ட அரசு அதிகாரக் குவியலை எதிர்த்துப் போராடும் அனைவரும் – மறைந்த கலைஞர் மு கருணாநிதி உள்பட – காலனியத்துக்கு எதிரானவர்களே. இவர்களின் குரல்களுக்கு நேர் எதிராகக் காலனிய ஆதரவுக் குரல்கள் இருப்பதையும் பிரிட்டனில் இருப்பதைப் பார்த்தோம்.
சமீபத்தில் மறைந்த வி.எஸ்.நைபால் போன்றோர்கள் காலனியத்தின் பிடியில் வளர்ந்துவந்த போதிலும் காலனிய விசுவாசிகளாகவே இருந்து வந்திருக்கின்றனர். இஸ்லாம், லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, இந்திய, கரிபீய உலகங்களைப் பற்றி அவருக்கு இருந்த கருத்துகளெல்லாம், காலனியத்தின் எதிர்மறையான இருண்ட எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே இருந்தது என பின்காலனியத்துவ அறிவுஜீவி எட்வர்ட் சையித் குற்றம்சாட்டினார். ‘ஆப்பிரிக்கா நாகரிகப் பகுதியல்ல; வெறும் புதர்கள் கொண்ட பூமி’ என்று கூட நைபால் ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். இஸ்லாம், இந்திய கலாச்சார வரலாற்றின் மீது ஏற்பட்ட களங்கமெனப் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.
நைபால் மட்டுமல்ல. உலகின் பல இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்களே காலனியத்துக்கு, காலனியத்தின் அடக்குமுறை சிந்தனைகளுக்கு ஆதரவாக இருப்பதைப் பார்க்கலாம். நைஜீரிய எழுத்தாளர் மறைந்த சினுவா அச்சேபே தனது இறுதி காலத்தில் காலனீயத்துக்கு வக்காலத்து வாங்கி புகழ் பாடினார். அதற்கு அவர் சொன்ன காரணம் மிக முக்கியமானது: பிரிட்டன் என்ற காலனியத் திட்டத்தின் கீழேதான் நைஜர் ஆற்றுப்பள்ளத்தாக்கின் நிலப் பகுதி நைஜிரீயா என்ற நாடாக மாறியது. எனவே, பிரிட்டனின் காலனிய ஆட்சியே நைஜீரியாவின் தோற்றத்திற்குக் காரணம் என்பது அவரது விசுவாசத்தின் அடிப்படை. இப்படிப்பட்ட விசுவாசமானது, காலனியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்று ஆட்சியமைக்க வாய்ப்பு பெறும் உள்ளூர் அதிகாரக் குழுக்களிடம் அதிகமானதாக இருக்கும்.
காலனியத்தின் வித்துக்களும் அவற்றின் தொடர் விளைவுகளும் சுதந்திரம் பெற்ற நாடுகளில் உள்ள அதிகார பீடத்தில் இருப்பவர்களிடத்திலும் உள்ளது. இதைத்தான் சிவா தனது கட்டுரைகளில் பதிவு செய்கிறார். நைபால் போன்றவர்கள், காலனியப் பிடியில் பிறந்து வளர்ந்தாலும் அவர்களின் விசுவாசம் ஒன்று காலனியத்தின் பெருமை பேசுகிறது அல்லது அவற்றால் பலன் பெற்ற உள்ளூர் அதிகார வர்க்கத்துக்குப் பாத்திரமானது. இப்படிப்பட்ட அதிகார மாற்றத்தில் உள்ளூரில் உள்ள சிறுபான்மையினர் அல்லது அதிகாரமற்ற குழுக்கள் இரண்டாந்தர குடிமக்களாக ஒதுக்கப்படுகின்றனர். ஒருவகையில் இன்று நடை பெறும் ஒவ்வொரு தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் ஏதாவது ஒரு காலனியப் பின்னணி இருக்குமெனில் அது மிகையான கூற்றல்ல.
அதனாலேயே சிவா என்ற தமிழரினால் சிங்கள காலனியத்திலிருந்து தப்பி பிரிட்டனுக்கு வந்து அங்கே இன சமத்துவ அரசியலுக்காகப் பங்களிக்க முடிந்தது. அதே சமயத்தில் பிறப்பால் பிராமணரான, கறுப்பர்கள் வசிக்கும் ட்ரினிடாட்டில் பிறந்த நைபால், தன் வாழ்வின் இறுதிவரை இனவெறிப் போக்குடனும் (அவருக்குப் பிடித்த கெட்ட வார்த்தை: நிக்கர்/nigger!), இஸ்லாம் எதிர்ப்பாளராகவும், இந்துத்துவக் கலாச்சாரப் பிரதிநிதியாகவும், காலனியத்தின் விசுவாசியாகவும் இருந்தார். நாம் வாழும் உலகத்தில், போன நூற்றாண்டில் இருந்தது போல் காலனிய அதிகார பீடங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், காலனியம் என்பது கலாச்சாரக் கச்சாப் பொருளாக, முதலீட்டியக் கருத்தாக, பொருளாதாரக் கொள்கைகளாகத் தொடர்ந்து நம்மை மூளைச் சலவை செய்த வண்ணம் உள்ளது. உலகமயமாக்கல் கொள்கைகளும் பன்னாட்டு வர்த்தக முறைகளும் காலனிய ‘நற்பண்புகளின்’ நீட்சியாகவே இருப்பதாகக் கல்வியாளர் கில்லி வாதாடியதை நான் குறிப்பிட்டிருந்தேன்.
ஊடகங்களிலும் தொடர்ந்து காலனியக் கருத்தியல்கள் கலாச்சாரப் பண்டங்களாக நுகரப்பட்டு வருகிறது. உதாரணமாக ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா நாட்டு ஊடகங்களில் ‘பார்டர் செக்யுரிட்டி’ (எல்லைப் பாதுகாப்பு) என்ற பெயரில் ஒரு ரியலிட்டி தொலைக்காட்சி சீரியல் மிகப் பிரசித்தம். இந்த மாதிரியான சிரீயல்கள் காலனியத்தின் பெருமைகளைப் பேசுகிறது. அது மட்டுமல்ல, வெள்ளையரல்லாத குடியேறிகள் எவ்வளவு ஆபத்தானவர்கள், நாகரிகமற்றவர்கள், சட்டங்களை மதிக்காதவர்கள், கிரிமினல்கள். ஆனால், வெள்ளையர்கள் மகத்தானவர்கள் என்ற நச்சைத் தொடர்ந்து விதைத்து வருகிறது. இது பற்றியும் இம்மாதிரியான பொதுப்புத்தி வெள்ளைப் பெருமையையும் காலனியக் கருத்தியல்களையும் தொடர்ந்து நம்மில் புகுத்தி வருகிறது என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)
கட்டுரை 1: [பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?]
கட்டுரை 2: [விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?]
கட்டுரை 3: [காலனியமும் சேவை நிறுவனங்களும்]
கட்டுரை 4: [காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்]
கட்டுரை 5: [சாம் செல்வன்; டரினிடாட் தமிழர்]
கட்டுரை 6: [சிறப்புப் பத்தி: நிழல் உலக அறிவுஜீவி சிவானந்தன்]
கட்டுரை 7: [ஈழ அரசியலும் காலனியத்துவமும்]
கட்டுரை 8: [கலைஞரும் காலனியமும்]