இலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகை அருகே நடைபெற்றுவரும் போராட்டத்திற்குள் திடீரென புகுந்த பாதுகாப்புப் படை அதிகாரிகள் அங்கிருந்த போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே நேற்று (ஜூலை 21) அதிபராக பதவியேற்றார். இலங்கையில் நடைபெற்றுவரும் போராட்டத்தை கட்டுப்படுத்துவதும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் தான் அவரது மிகப்பெரிய சவால்களாக உள்ளன.
முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி நடைபெற்றுவந்த போராட்டம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமடைந்தது. ஜூன் 9ஆம் தேதி அன்று போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். இதனைதொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய கோத்தபய தனது அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தார். ஆனால், போராட்டக்காரர்கள் தொடர்ந்து அதிபர் மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர்.
புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கே, ராஜபக்சே குடும்பத்தின் ஆதரவாளர் என போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், ரணிலுக்கு எதிராகவும் அவர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
ரணில் அதிபராக பதவியேற்ற அடுத்த நாளே கொழும்புவில் போராட்டக்களத்திற்குள் பாதுகாப்புப் படை புகுந்துள்ளது. இன்று அதிகாலையில் அதிபர் செயலகத்தின் அருகே திடீரென நூற்றுக்கணக்கில் இறக்கப்பட்ட போலீசார் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள், போராட்டக்காரர்கள் அமைத்திருந்த இரும்பு தடுப்புகளையும் அகற்றினர்.
மேலும், அதிபர் செயலகத்துக்குச் செல்லும் வழியில் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்கள் மற்றும் தடுப்புகளை அவர்கள் பிரித்து எறிந்தனர். போராட்டக்காரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்துக்குச் செல்லுமாறு பாதுகாப்புப் படை வீரர்கள் அறிவுறுத்தினர். போராட்டக்களத்தில் இருந்து 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
~அப்துல் ராபிக் பகுருதீன்