ஜம்மு, காஷ்மீரில் பாதுகாப்பான சூழல் நிலவுவதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஜனவரி 31) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் இன்று துவங்கியது.
இந்த கூட்டத்தொடரில் திரவுபதி முர்மு பேசும்போது, “வளர்ச்சியடைந்த இந்தியாவானது இளைஞர் சக்தி, பெண்கள் சக்தி, விவசாயிகள் மற்றும் ஏழைகள் ஆகிய நான்கு வலுவான தூண்களை அடிப்படையாக கொண்டது என்று அரசு முழுமையாக நம்புகிறது.
கடந்த ஆண்டுகளில், உலகம் இரண்டு பெரிய போர்களைக் கண்டது மற்றும் கொரோனா போன்ற ஒரு தொற்றுநோயை எதிர்கொண்டது.
இதுபோன்ற உலகளாவிய நெருக்கடிகள் இருந்தபோதிலும், நமது அரசு பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தது. மேலும், இந்தியர்களின் கடன் சுமையை அதிகரிக்க விடவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்களில் முதல் முறையாக மின்சாரம் மற்றும் சாலை இணைப்பு வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இலட்சக்கணக்கான பழங்குடியின குடும்பங்கள் இப்போது தான் குழாய்கள் மூலம் சுத்தமான தண்ணீரைப் பெறத் தொடங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு 4ஜி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை உலகின் மிகப்பெரிய விண்வெளி சக்தியாக மாற்றுவதற்கு நமது அரசு செயல்பட்டு வருகிறது. இது மனித வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கான ஒரு வழிமுறையாகும். விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கும் முயற்சி இதுவாகும்.
இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பல புதிய விண்வெளி தொடக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ககன்யான் விண்வெளிக்கு செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
சுற்றுலா என்பது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் துறையாகும். வடகிழக்கு பகுதிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, அந்தமான் மற்றும் லட்சத்தீவுகளுக்கு மக்கள் அதிகளவில் பயணம் செல்கின்றனர். ராமர் கோவில் குடமுழுக்கு முடிந்து அயோத்தியில் சுமார் 13 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இந்தியாவின் எல்லையில் நவீன கட்டமைப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. பயங்கரவாதத்திற்கு நமது படைகள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பான சூழல் நிலவுகிறது. நக்சல் வன்முறை சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளது என்று திரவுபதி முர்மு தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெண் நிர்வாகி மீது தாக்குதல்: அமர்பிரசாத் ரெட்டி முன் ஜாமீன் மனு!
ஜி20 மாநாடு இந்தியாவை வலுப்படுத்தியுள்ளது: திரவுபதி முர்மு