வைஃபை ஆன் செய்ததும், ‘திருச்சி சூர்யா மீண்டும் பாஜகவில் அவர் வகித்து வந்த பதவியில் தொடர்கிறார்’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு இன்பாக்சில் வந்து விழுந்தது. அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளராக இருந்தவர் திருச்சி சூர்யா. திமுகவின் மூத்த எம்.பி.யான திருச்சி சிவாவின் மகன் சூர்யா, சில ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோடு நெருக்கமாக இருந்தார் திருச்சி சூர்யா. அண்ணாமலைக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பேசி வந்தார்.
இந்த நிலையில்தான் கடந்த 2022 நவம்பர் மாதம் திருச்சி சூர்யாவும் பாஜகவின் பெண் நிர்வாகி டெய்சி என்பவரும் பேசிய ஓர் ஆடியோ லீக் ஆனது. இதில் பாஜக அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் பற்றியும், டெய்சி பற்றியும் ஆபாசமாக பேசியிருந்தார் திருச்சி சூர்யா.
இது தொடர்பான கட்சியின் விசாரணை திருப்பூரில் நடைபெற்ற நிலையில், அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த டெய்சியும், சூர்யாவும், ‘நாங்கள் அக்கா தம்பியாக பழகுகிறோம். இதை பெரிதுபடுத்த விரும்பவில்லை’ என்றனர். இது பாஜகவில் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஆனபோதும் திருச்சி சூர்யாவை ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்தார் அண்ணாமலை. ஆனால் இந்த ஆடியோவை வெளியிட்டதே டெய்சிதான் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சூர்யா குற்றம் சாட்டினார். அண்ணாமலைக்கும் இந்த நிலை ஒரு நாள் வரும் என்றும் எச்சரித்தார்.
ஆறு மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் சஸ்பெண்ட் காலம் முடிந்ததும் மீண்டும் பாஜகவில் தனது பழைய நிலைக்குத் திரும்ப முயற்சித்தார் திருச்சி சூர்யா. ஆனால் அதற்கு அண்ணாமலையின் வலதுகரமாக இருந்த அமர் பிரசாத் ரெட்டி அனுமதிக்கவில்லை. திருச்சி சூர்யா திமுகவோடு பேசிக் கொண்டிருப்பதாக அண்ணாமலையிடம் சொல்லி, இருவருக்கும் இடையிலான கொஞ்ச நஞ்ச உறவையும் வெட்டிவிட்டார் அமர் பிரசாத் ரெட்டி. தன்னை எப்படியாவது பாஜகவில் மீண்டும் அண்ணாமலை சேர்த்துக் கொள்வார் என்று சூர்யா முயற்சித்தார். ஆனால் ஒவ்வொரு முயற்சியும் அமர் பிரசாத் ரெட்டி மூலம் தவிடுபொடியானது.
இந்த நிலையில்தான் அரசியலில் ஆறு மாதங்கள் சும்மா இருந்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்களே என்று மீண்டும் தனது தாய்க் கழகமான திமுகவில் சேர முயற்சித்தார் சூர்யா. அண்ணாமலையின் பல ரகசியங்கள் தனக்குத் தெரியும் என்றும் திமுகவில் இணைத்துக் கொண்டால் அண்ணாமலைக்கு எதிரான பீரங்கியாக தன்னை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் திமுகவுக்கு சிலர் மூலம் தூதுவிட்டார் சூர்யா.
ஆனால் முக்குலத்து பிரமுகரான திருச்சி சூர்யாவை மீண்டும் திமுகவில் அனுமதிக்கவே கூடாது என்பதில் திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் மிகவும் தெளிவாக இருந்தார். திருச்சியில் இருந்து அன்பில் மகேஷை மீறி சென்னையில் திமுக தலைமையிடம் சூர்யாவால் நெருங்கவே முடியவில்லை.
இந்த நிலையில்தான் அதிமுக-பாஜக கூட்டணி உடைந்தது. ஏற்கனவே பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு சென்ற சி.டி.ஆர். நிர்மல் குமார் மூலமாக திருச்சி சூர்யாவை அதிமுகவுக்கு இழுக்க ஒரு முயற்சி நடந்தது. அதுவும் இழுத்துக் கொண்டே இருந்தது.
இந்த அரசியல் சூழலில் திடீரென அமர் பிரசாத் ரெட்டி கடந்த மாதம் சிறை சென்றார். அவர் மீது குண்டாஸ் போடப்படும் என்றும் வெளியே வர மாதக் கணக்காகும் என்றும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நேரத்தை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த திருச்சி சூர்யா, தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் மூலம் அதிமுகவில் திருச்சி சூர்யா இணையப் போவதாக செய்திகளை வர வைத்தார்.
ஏனென்றால் இப்போது அண்ணாமலையைத் தாக்குவதில் திமுகவுக்கு நிகராக அதிமுகவும் தயாராக இருக்கிறது. அதுவும் அண்ணாமலை குறித்து அதிமுகவில் இருந்து திருச்சி சூர்யா வாய் திறந்தால் அது பெரிய அளவில் பேசப்படும் வாய்ப்பும் இருக்கிறது.
இந்த தகவல்கள் எல்லாம் கிடைத்த நிலையில்தான்… அண்ணாமலை திடீரென திருச்சி சூர்யாவை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வதென முடிவெடுத்து அதை இன்று அறிவித்தும் விட்டார். அமர் பிரசாத் ரெட்டி சிறையில் இருக்கும் நேரமாகப் பார்த்து அண்ணாமலைக்கே ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்து பாஜகவில் தன் பழைய இடத்தை பிடித்துவிட்டார் பலே திருச்சி சூர்யா என்று பாஜகவிலேயே கூறுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜூலை 30 ஆம் தேதி, ‘அண்ணாமலையின் பொய் பிம்பம் விரைவில் உடையும்’ என்று தனது சமூக தளப் பக்கத்தில் விமர்சித்த திருச்சி சூர்யா… அண்ணாமலையை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்குவேன் என்று இன்று கூறியுள்ளார்.
திமுகவிலோ, அதிமுகவிலோ சேர்ந்து தனக்கு எதிராக சூர்யா உள் விஷயங்களை பேசிவிடக் கூடாது என்பதால்தான் அவசர அவசரமாக அவரை பாஜகவில் மீண்டும் சேர்த்துக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை என்கிறார்கள் பாஜகவினர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
துணைவேந்தர்கள் நியமனம்: ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
‘போஸ்டர் அடி’ அண்ணன் ரெடி…கப்-பை கைப்பற்றத் தயாராகும் தளபதி விஜய்!