Durai Dayanidhi Apollo Medical report
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட துரை தயாநிதி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலமைச்சர் ஸ்டாலினுடைய அண்ணன் மு.க. அழகிரியின் மகனான துரை தயாநிதி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பினை சரி செய்ய டிசம்பர் 7 ஆம் தேதி மூன்று மணி நேரம் அவருக்கு மேஜர் ஆபரேஷன் நடந்தது. இது தொடர்பாக மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் விரிவான செய்தி வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் டிசம்பர் 12 ஆம் தேதி இரவு அவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்சையும் நடந்திருக்கிறது என்று அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
”டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற்ற ஆபரேஷனுக்குப் பிறகு துரை தயாநிதி கண் விழித்துப் பார்த்தார். ஆனபோதும் ஆபரேஷனுக்கு பிறகான அவரது மற்ற உறுப்புகளின் சீரான இயக்கம் கருதி மீண்டும் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து உறக்க நிலையிலேயே வைத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். அவருக்கு சப்போர்ட்டிவ் ஆக வென்டிலேட்டரும் பொருத்தப்பட்டது.
இந்த நிலையில் துரை தயாநிதியை தொடர்ந்து கண்காணித்து வரும் ஸ்பெஷலிஸ்டுகள் டீம் மருத்துவர்களின் பரிந்துரையில்… டிசம்பர் 12 ஆம் தேதி இரவு மூளைக்கு செல்லும் நரம்புகளில் இருந்த ரத்த அடைப்பை சரி செய்வதற்காக இரண்டாவது ஆபரேஷனும் நடந்திருக்கிறது.
துரை தயாநிதி கடந்த ஒரு வாரமாகவே தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டருடன் இருப்பதால் இயல்பான முறையில் அவரால் சுவாசிக்க இயலாத நிலை நிலவுகிறது. நீண்ட நேரமாக வென்டிலேட்டரை சார்ந்திருக்கும் நிலையில், டிரக்கியோஸ்டமி முறையிலும் சுவாசத்தை சீராக்கி வருகின்றனர் மருத்துவர்கள். அதாவது சுவாசக் குழாய் வழியாக அறுவை சிகிச்சை மூலம் உருவாக்கப்பட்ட ஒரு திறப்பு ஆகும். கழுத்தில் ட்ரக்கியோஸ்டமி திறப்பை உருவாக்கிய பிறகு மூக்கு மற்றும் வாய் வழியாக சுவாசிக்காமல் ட்ரக்கியோஸ்டமி குழாய் வழியாக சுவாசிக்கவே இந்த ஏற்பாடு” என்கிறார்கள் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்களில்.
காலை தொடங்கி இரவு வரை மருத்துவமனையிலேயே இருக்கும் அழகிரி இரவு மட்டும் ரெசிடன்சி டவர் ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுத்துவிட்டு வருகிறார். காந்தி அழகிரியோடு செல்வி மருத்துவமனையிலேயே இருந்து பார்த்துக் கொள்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மருத்துவமனைக்கு வந்துசெல்கிறார். முதல்வரின் மாப்பிள்ளை சபரீசனும் மருத்துவமனைக்கு சென்று உடல் நலம் விசாரித்துவிட்டுச் சென்றார்.
இந்த நிலையில் துரை தயாநிதி கோமா ஸ்டேஜுக்கு சென்றுகொண்டிருப்பதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. திமுகவின் பல நிர்வாகிகளுமே கூட இதுகுறித்து தங்கள் சந்தேகங்களை பலரிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சந்தேகங்கள் குறித்து அப்பல்லோமருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது,
”துரை தயாநிதிக்கு மூளை தொடர்பான முக்கியமான அறுவை சிகிச்சை செய்திருப்பதால் இதுபோன்ற சந்தேகங்கள் ஏற்படலாம். ஆனால் இப்போதைக்கு medically induced coma (MIC), என்றுதான் குறிப்பிட வேண்டும். அதாவது மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமா. மயக்க மருந்தின் கட்டுப்படுத்தப்பட்ட டோஸால் ஏற்படும் ஒரு தற்காலிக ஆழ்ந்த மயக்க நிலையில் அவரது உடல் நலன் கருதி மருத்துவர்களே வைத்திருக்கிறார்கள். இதை செயற்கை கோமா என்றும் சொல்லுவார்கள். அவரது நலனுக்காகவே இது செய்யப்பட்டிருக்கிறது” என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.
மேலும் அழகிரியின் மூத்த மகள் அமெரிக்காவில் இருப்பதால் அங்கே அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கலாமா என்றும் ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அப்பல்லோவில் இப்போது முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்பெஷலிஸ்டு டீம் சேர்ந்து துரை தயாநிதியை கண்காணித்து சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே இருக்கும் டாக்டர்கள் மூளை தொடர்பான சிகிச்சைகளில் மிகுந்த அனுபவம் மிக்கவர்கள். அதேநேரம் அமெரிக்காவில் நவீன சிகிச்சை முறைகளும், நவீன சிகிச்சைக்கான தொழில் நுட்ப கருவிகளும் இருக்கின்றன என்பது சாதகமான விஷயம். இந்த சூழலில் துரை தயாநிதியை அமெரிக்கா அழைத்துச் செல்லலாமா என்று தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
கேரளாவில் திடீரென அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு!
மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
Durai Dayanidhi Apollo Medical report
Comments are closed.