சென்னையை அடுத்த பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என மாநிலங்களவையில் மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு இன்று (ஆகஸ்டு 1) வி.கே.சிங் பதிலளித்தார்.
“சென்னை , மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அங்கு மக்கள் நெருக்கத்தைக் கட்டுப்படுத்த 2-வது விமான நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்தன.காஞ்சிபுரம் , திருப்போரூர், மதுராந்தகம், மாமண்டூர், பரந்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இடம் தேர்வுக்கான ஆய்வுகள் நடைபெற்று வந்தன. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் பகுதியை தமிழக அரசு தேர்வு செய்தது.
பரந்தூர் ஊராட்சி, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சிகளை கொண்டுள்ளது.
விமானப் போக்குவரத்து ஆணையரகத்தால் பரந்தூர் பகுதி இறுதி செய்யப்பட்டது. இந்தப் பகுதியில் விமான நிலையம் அமைக்க அரசாணை வெளியிடுவதற்கு முன்பு ஆரம்பக் கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.
5000 ஏக்கர் பரப்பளவில் 40 ஆயிரம் கோடி செலவில் இரண்டு ஓடுபாதைகளுடன் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும், தடையில்லாத வகையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இந்த விமானநிலையம் அமைய உள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த ஜூலை 26 ஆம் தேதி மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங்கை டெல்லியில் சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பரந்தூரில் விமான நிலையம் அமைக்க சாத்தியக் கூறுகள் உள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்