தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது : கே.எஸ்.அழகிரி

Published On:

| By christopher

திமுகவுடன் நடந்த தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணி கட்சிகளிடையே இன்று (ஜனவரி 28) முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

சென்னை அறிவாலயத்தில் திமுக – காங்கிரஸ் இடையே முதற்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மதியம் 3 மணியளவில் நடைபெற்றது.

இதில் திமுக சார்பில், திமுக சார்பில் தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த டி.ஆர்.பாலு., கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

திருப்திகரமாக இருந்தது!

அப்போது அவர், ”திமுகவுடன் நடந்த தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. தொகுதி பங்கீடு இறுதி முடிவுகளை உங்களிடம் விரைவில் பகிர்ந்து கொள்வேன்.

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 40 தொகுதிகளிலும் எவ்வாறு வெற்றி பெறுவது, எவ்வாறு வேட்பாளர்களை தேர்வு செய்வது, எந்தவிதமான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வது, அதிமுக, பாஜகவை எப்படி எதிர்கொள்வது  என்பது குறித்து பேசினோம். திமுகவிடம் நாங்கள் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியல் எதையும் நாங்கள் வழங்கவில்லை” என்று அழகிரி தெரிவித்தார்.

அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படும்!

தொடர்ந்து பேசிய முகுல் வாஸ்னிக் தெரிவித்திருப்பதாவது, ”நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முதல் பேச்சுவார்த்தை நீண்டநேரம் நடைபெற்றது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சக்திகளை ஆட்சியில் இருந்து அகற்றுவது குறித்து விவாதித்தோம்.

மேலும் தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை பெறுவது எப்படி, ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது எப்படி என்பது குறித்து விவாதித்தோம்.

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்.”  என்று அவர் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பெரிய ஹீரோ, பிரமாண்ட பட்ஜெட்… டோலிவுட்டில் ‘மாஸ்’ என்ட்ரி கொடுக்கும் அட்லி

பொதுத் தொகுதி கேட்கும் திருமா! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel