பிரதமர் மோடி அருகில் அமரவைக்கப்பட்டது பற்றி எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியில் பேசியுள்ளார்.
டெல்லியில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இதற்காக கூட்டம் நடைபெற்ற அசோகா ஹோட்டலுக்கு எடப்பாடி சென்ற போது அவரை பாஜக தேசிய தலைவர் நட்டா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்ட மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அருகே எடப்பாடி பழனிசாமி அமரவைக்கப்பட்டார். இந்நிலையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்த இடம் அதிமுகவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் பிரதமர் மோடிக்கு அருகில் எடப்பாடி பழனிசாமிக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இந்தசூழலில் டெல்லி சென்று வந்த பிறகு இன்று (ஜூலை 19) பிற்பகல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
பிரதமர் மோடி அருகில் அமரவைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “விசித்திரமாக கேள்வி கேட்காதீர்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் எல்லோருக்கும் இடம் கொடுத்தார்கள். அதுபோன்று எனக்கும் கொடுத்தார்கள் அவ்வளவுதான்” என்றார் எடப்பாடி பழனிசாமி.
தொடர்ந்து பேசிய அவர், “நேற்றைய தினம் வரை 1.7 கோடி உறுப்பினர்கள் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளனர். எங்களுடைய இலக்கு 2 கோடி. நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் ஆங்காங்கே தொடங்கிவிட்டன. என்.டி.ஏ தலைவர்கள் அந்தந்த மாநிலத்தில் தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வைத்தாலும் தமிழகத்தில் அதிமுக தான் தலைமை” என கூறினார்.
பிரியா
ரூ.340 வரை உயர்ந்த மதுபானங்களின் விலை!
45 ஆண்டுக்கு பின் தாஜ்மஹாலை தொட்ட யமுனா!