ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் எப்போது கைது செய்யப்படுவார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுந்திருக்கிறது. Seaman under police surveillance
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
“பெரியார் சொல்லாததை சொன்னதாக சீமான் பத்திரிகையாளர்களிடம் கூறியிருக்கிறார். அது தொடர்பான ஆதாரத்தை அவர் வழங்க வேண்டும்” என்று தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் கோரிக்கை வைத்து… இதற்காக சீமான் வீட்டையும் முற்றுகையிட்டார்.
அதன் பிறகும் பெரியாரை செய்தியாளர் சந்திப்புகளிலும் கூட்டங்களிலும் கடுமையாக விமர்சித்தார் சீமான். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சீமான் மீது போலீஸ் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டன.
எழுபதற்கும் மேற்பட்ட வழக்குகளும் சீமான் மீது பதிவு செய்யப்பட்டன. 7000 வழக்குகள் கூட போட்டுக் கொள்ளுங்கள் என சீமான் அப்போது பதிலளித்தார்.
ஜனவரி 22ஆம் தேதி மீண்டும் பெரியாருடைய இயக்கங்கள் சார்பாக சீமான் வீடு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது திராவிட மாடல் அரசு பெரியாரை அவமதித்த சீமானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று பெரியாரிய அமைப்புகளின் நிர்வாகிகள் வெளிப்படையாகவே கேள்விகளை கேட்டார்கள்.
தள்ளிப்போன கைது

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் தொடங்கியிருந்த நிலையில், சீமானை கைது செய்தால் அது இடைத்தேர்தலில் அவருக்கு அரசியல் ஆதாயத்தை ஏற்படுத்தும் என்று கருதி கைது நடவடிக்கை தள்ளிப் போடப்பட்டது.
இந்த சூழலில் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் நடந்து முடிந்து விட்ட நிலையில், சீமான் எப்போது கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்ப்பு பெரியாரிய இயக்கத்தினர் மட்டுமல்ல திமுக நிர்வாகிகள் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூரில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், “பெரியாருக்கு மரியாதை அளிக்காதவர்களுக்கு நாங்களும் மரியாதை அளிக்க மாட்டோம். எங்கள் தலைவர் மட்டுமல்ல, எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் பெரியார்” என்று சீமானை மறைமுகமாக எச்சரித்திருந்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் முடிந்து விட்ட நிலையில், பிப்ரவரி 7ஆம் தேதி அதாவது வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் சீமான் கைது செய்யப்படலாம் என ஏற்கனவே சீமானுக்கு தேதி குறித்த ஸ்டாலின் என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
கண்காணிப்பில் சீமான் Seaman under police surveillance

லேட்டஸ்ட் தகவல் படி, ஈரோட்டில் இருந்து பிப்ரவரி 4 ஆம் தேதியே சென்னை வந்துவிட்ட சீமானின் மூவ்மென்ட்டுகளை போலீசார் கண்காணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கைது நடவடிக்கைக்கு முன்பாக போலீசார் இயல்பாக மேற்கொள்ளும் நடைமுறைதான் கண்காணிப்பு.
தன்னை போலீஸ் கண்காணிக்கிறது என்ற தகவல் சீமானுக்கும் தெரிந்திருக்கிறது.
இதுகுறித்து இன்று(பிப்ரவரி 6) தனது நிர்வாகிகளிடம் பேசிய அவர், “என்னை எப்போது கைது செய்வார்கள் என்று தானே காத்திருக்கிறேன்? கலைஞர் என்னை கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலம் தான் சினிமாக்காரனாக இருந்த நான் அரசியல்வாதியாக மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்போது ஸ்டாலின் என்னை கைது செய்தால் அது மேலும் எனக்கு சாதகத்தையே பெற்று தரும்” என்று சொல்லியிருக்கிறார்.
ஆனாலும் சீமானின் குடும்பத்தினர் இதையெல்லாம் அறிந்து கவலையோடு இருக்கிறார்கள் என்கிறார்கள் நாம் தமிழர் தம்பிகள். Seaman under police surveillance