வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவது போல பேசியிருந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று பிகாரை சேர்ந்தவரும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் வியூக நிபுணராகவும் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் மார்ச் 10 ஆம் தேதி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 12) சீமான் மீது, தேசிய ஒருமைப்பாட்டிற்கு களங்கம் விளைவித்தல், 153 (B) (C), வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் 505 (1), மிரட்டல் விடுத்தல் 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுமட்டுமல்ல ஈரோடு மாவட்ட போலீஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், பிரசாந்த் கிஷோரை டேக் செய்து சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதற்கான விளக்கங்களையும் கிட்டத்தட்ட ரிப்போர்ட் சமர்ப்பிப்பது போல தெரிவித்துள்ளது ஈரோடு மாவட்ட போலீஸ்.
மார்ச் 12 ஆம் தேதி ஈரோடு மாவட்ட போலீஸின் ட்விட்டர் பக்கத்தில், “திரு. பிரசாந்த் கிஷோரின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இதை தெரிவிக்கிறோம். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக சீமான் பேசிய விவகாரத்தில் அவர் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கைத் தொடங்கிவிட்டது.
சர்ச்சைக்குரிய அந்த பேச்சு 13-2-23 அன்று ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம், திருநகர் காலனி பொதுக்கூட்டத்தில் பேசப்பட்டது. அந்த கூட்டத்தில் சீமான் பேச்சுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிராக பேசியதாக சீமான் மீது கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குற்ற எண் 90/2023 செக்ஷன் 153 பி (சி), 505 (1) (சி), 3 (1) (ஆர்) எஸ்.சி.எஸ்.டி வகுப்பினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதன் மீதான நடவடிக்கைகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
13/02/23 அன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய பேச்சுக்காக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட வீடியோவின் அடிப்படையில்,
சாட்சிகளின் விசாரணை மற்றும் வீடியோ ஆதாரங்களின் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு 90/23 இல் மார்ச் 11 ஆம் தேதி தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கூறுகள் மற்றும் குற்றவியல் மிரட்டல்களுக்காக பிரிவுகளும் சேர்க்கப்பட்டது.
உரிய சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது, சட்டம் மற்றும் நடைமுறைகளின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தை அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான இடமாக மாற்ற தமிழக காவல்துறை நேர்மையான மற்றும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று ஆறு ட்விட்டர் பதிவுகளை பிரசாந்த் கிஷோரின் பெயரை டேக் செய்து வெளியிட்டிருக்கிறது ஈரோடு மாவட்ட போலீஸ்.
இதை சுட்டி நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், “தமிழ்நாடு காவல்துறையை இயக்குவது ஐயா ஸ்டாலின் அவர்களா இல்லை பிரசாந்த் கிஷோரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ’பீகாரியிடம் அடகு வைக்கப்பட்ட திராவிடம்’ என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட போலீஸின் வெவ்வேறு பதிவுகளில் பிகார் போலீஸ், ஜக்ரான் நியூஸ் போன்ற ட்விட்டர் முகவரிகள் டேக் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த தகவலை அவர்களுக்கு தெரியப்படுத்தி தெளிவு ஏற்படுத்த ஈரோடு போலீஸ் மேற்கொண்ட முயற்சி பாராட்டத் தக்கது.
ஆனால் எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத, மக்கள் பிரதிநிதியாக இல்லாத பிரசாந்த் கிஷோர் ஒரு வீடியோவை போட்டார் என்பதற்காக அவருக்கு டேக் செய்து ஈரோடு போலீஸ் இவ்வளவு விளக்கம் கொடுப்பது ஏன் என்பதுதான் கேள்வியாக சமூக தளங்களில் எழுப்பப்படுகிறது. பிரசாந்த் கிஷோர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக தேர்தல் பணியாற்றியதற்காக இந்த விளக்கம் அளிக்கப்படுகிறதா என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இந்த நிலையில்தான் ஈரோடு போலீஸ் அளித்த விளக்கத்துக்கும் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.
–வேந்தன்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஃபைனலில் இந்தியா மாஸ் என்ட்ரி!
அதானி – ராகுல் காந்தி: எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!