முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலரைச் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டிய விவகாரத்தில் தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் விசாரணை நடத்த டெல்லியிலிருந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் அருண்கேல்டர் இன்று (ஆகஸ்ட் 1) சென்னை வந்தார்.
திமுக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ராஜகண்ணப்பன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்வீட் கொள்முதல் செய்ததில் முறைகேடு, அதையடுத்து அவர் வகித்த போக்குவரத்துத் துறை ஆணையர் அலுவலகத்தில் ரெய்டு என அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கினார்.
இந்தநிலையில், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) ராஜேந்திரனைத் தனது இல்லத்தில் வைத்துச் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதுகுறித்து ராஜேந்திரன் அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த மார்ச் 27 ஆம் தேதி காலை அமைச்சரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றேன். வீட்டுக்குள் சென்று அவருக்கு விஷ் பண்ணினேன். அதற்கு அமைச்சர், ‘ஏன்யா நீ ஒரு எஸ் சி. பிடிஓ. சேர்மன் சொன்னாதான கேப்ப. மத்தவங்க யார் சொன்னாலும் கேக்க மாட்ட. உன்ன நா இந்த சீட்டிலேயே வைக்க மாட்டேன். அமுதா மேடத்துக்கிட்ட சொல்லி உன்ன வட மாவட்டத்துக்கு மாத்திடுவேன் என கடுமையான தொனியில் கூறினார். எனக்கு 57 வயதாகிறது. இதுவரை என்னுடைய அனுபவத்தில் இந்த அளவு நான் மனக்காயம் பட்டதில்லை. ஐந்து முறை ஆறு முறை எஸ்.சி. பிடிஓ என்று கூறினார் அமைச்சர். நான் அமைச்சரைப் பற்றி குறை கூற விரும்பவில்லை. உள்ளபடி நடந்ததை சொல்லி இருக்கிறேன். நேற்று முழுவதும் என்னால் சாப்பிட முடியவில்லை. இரவு தூக்கம் வரவில்லை. காலையில் எழுந்து வாக்கிங் சென்றுவிட்டு மாவட்ட ஆட்சியரை சந்திக்கச் சென்றேன். துணை ஆட்சியர் சந்திக்கச் சென்றேன். முடியவில்லை. மீண்டும் முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து என் பணியைச் செய்து கொண்டிருக்கிறேன்” என்று தனது மனப் புழக்கத்தைக் கொட்டினார்.
இந்நிலையில் அவரை போக்குவரத்துத் துறையிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதேசமயத்தில், புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர், அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தச்சூழலில் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் விசாரணை நடத்த டெல்லியிலிருந்து இன்று (ஆகஸ்ட் 1) காலை தேசிய எஸ்சிஎஸ்டி ஆணையத்தின் துணைத்தலைவர் அருண்கேல்டர் சென்னை வந்தார். ஆணையத்தின் உறுப்பினர்கள் அனுபாலா, ஹர்ஸ் சவுகான் ஆகியோரும் வருகின்றனர். அவர்கள் இன்றும், நாளையும் அமைச்சரிடம் விசாரணை நடத்துகின்றனர்.

அதுபோன்று தென்காசி, ராமநாதபுரம், வேலூர், தர்மபுரி, நீலகிரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் பட்டியல் வகுப்பினருக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்துகின்றனர். தமிழக அரசின் தலைமை செயலர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருடன், மாநிலத்தில் நடைபெற்ற குறிப்பிட்ட சில நிகழ்வுகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
பிரியா