மோடி -புதின் சந்திப்பு: பேசப்போவது என்ன?

அரசியல்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்கள் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பது உலகநாடுகளால் உற்றுநோக்கப்படுகிறது.

ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 22வது மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கண்ட் நகரில் செப்டம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் செரீப் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நாளை (செப்டம்பர் 15) தனி விமானத்தில் புறப்பட்டுச் செல்கிறார்.

மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் செரீப், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோரை தனித்தனியே பிரதமர் மோடி சந்தித்துப் பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் படையெடுப்பில் இதுவரை இந்தியா நடுநிலையான போக்கையே கடைப்பிடித்து வருகிறது. உக்ரைன், ரஷ்யா ஆகிய இருதரப்புகளும் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஆரம்பம் முதலே இந்தியா வலியுறுத்தி வருகிறது.

sco summit putin modi meet trade food supplies

அதேநேரத்தில் இந்த இருநாடுகளின் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை புதிய உச்சத்தை தொட்டது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்தன. இதையடுத்து ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்தது. இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து அதிகபடியான கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியானது கணிசமாக அதிகரித்துள்ளது. அதுவும் மேற்கத்திய நாடுகளின் தடைக்கு மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் இதர நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து உணவு உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய ரஷ்யா ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக சர்வதேச அளவில் உணவு தானியங்கள், உரங்கள், எரிபொருளுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை குறித்து இரு தலைவர்களும் கடந்த ஜூலை மாதம் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்.

sco summit putin modi meet trade food supplies

அதுபோல், 2021ம் ஆண்டு, டிசம்பரில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வந்தபோதும், உணவு தானியங்கள், உரங்கள், மருந்துகள் தொடர்பான ஏற்றுமதி, இறக்குமதி குறித்து புதினும் மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எட்டப்பட்ட முடிவுகளை அமல்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்து வருகின்றனர். இதுதொடர்பாக, புதினும் மோடியும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மீண்டும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மருந்து தயாரிப்பு, வைரத் தொழில்களிலும் இந்தியா பெரிய அளவில் ரஷ்யாவில் முதலீடு செய்து உள்ளது. அதுபோல், ரஷ்யாவுடன் மூன்று ஆண்டு உரம் இறக்குமதி ஒப்பந்தத்தையும் இந்தியா எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீண்டகால உர இறக்குமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முயற்சிகள் அரசியல் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டன. ஆகையால் இதுகுறித்து முழுமையாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

ரஷ்யாவின் சமீபத்திய அறிக்கையின்படி, மொத்தம் 71 கோரிக்கைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோரிக்கைகள் இறக்குமதி சார்ந்ததாகும். இதில் சில சாத்தியமான ஏற்றுமதி வாய்ப்புககளும் உள்ளன. மேலும், இந்தியாவும், ரஷ்யாவும் பணம் செலுத்தும் வழிமுறைகள் குறித்து விவாதித்து வருகின்றன. இது சரிசெய்யப்படும் பட்சத்தில் இவ்விரு நாடுகளுக்கு இடையேயான வணிகம் விரிவாக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, இதுகுறித்தும் மோடியும் புதினும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெ.பிரகாஷ்

இந்தியாவில் பால் உற்பத்தி 6% அதிகரிப்பு: மோடி

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *