தென்காசியில் பள்ளி ஒன்றில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாணவர்களை பிறந்த நாள் வாழ்த்து கூற வைத்த சம்பவம் தொடர்பாக பாஜக தரப்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் இன்று (நவம்பர் 27) கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தென்காசியில் உள்ள பள்ளி ஒன்றில், அங்கு பயிலும் பள்ளி மாணவர்கள் “ஹேப்பி பார்த் டே உதய் அண்ணா” எனக் கூறும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தமிழக பாஜக ஸ்டார்ட்அப் பிரிவு மாநில தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
உதயநிதி பிறந்தநாள்… மாணவர்களிடம் பணம் வசூல்!
அதில், “தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் (செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி) கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டமும், அந்த சமயத்தில் திமுக நிர்வாகிகளின் வருகைக்காக மாணவச் செல்வங்கள் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில், பத்திரிகை, தொகைக்காட்சி ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.
பள்ளி மாணவர்களிடையே சாதி, மத பாகுபாடு கூடாது என்று எப்படிச் சொல்கிறோமோ, அதேப்போலதான் அரசியலும் இருக்கக் கூடாது என்பதே பொதுவான கருத்து.
இப்படி இருக்கையில், அரசியல் கட்சியைச் சேர்ந்தவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தனியார் பள்ளி மைதானத்தில் வைத்து நடத்தியதுடன், ஆயிரத்துக்கும் அதிகமான சிறார்களை மணிக்கணக்கில் காக்க வைத்து, யோகா செய்யும்படி கூறியுள்ளார்கள். மேலும் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, ‘ஹாப்பி பர்த்டே உதயண்ணா’ என்று சொல்ல வைத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து 20க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் அழைத்துவரப் பட்டுள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாணவர் ஒருவருக்கு தலா ரூ.500 வரை வசூலிக்கப்பட்டது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியிருக்கிறது. 500 ரூபாய் வரை வசூலித்துக்கொண்டு ரூ.50 மதிப்புள்ள ஷீல்டு, அதுவும் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, ஜெயபாலன் படம் போட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.
துணை முதல்வரின் பிறந்த நாளைக் கொண்டாட மாணவர்களிடம் பணம் வசூலித்தது மிகவும் மோசமான செயல். சில பள்ளிகள் மாணவர்களின் போக்குவரத்துச் செலவுக்கும் தனியாக பணம் வசூலித்துள்ளனர். பணத்தை வசூலித்தவர்கள் சரியான உணவு வசதி, தண்ணீர் வசதி கூட ஏற்பாடு செய்யவில்லை என்பது வேதனையான ஒன்றாகும்.
எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும், மாணவர்களை வெயிலில் நிற்க வைத்தவர்கள் மீதும், இதுபோன்ற அரசியல் நிகழ்ச்சியினை நடத்துவதற்கு அனுமதி அளித்த பள்ளியின் மீதும் துறை ரீதியிலான கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
யோகா போட்டி என்ற பெயரில் மாணவர்களிடம் கட்டாய வசூல் செய்த அரசியல் கட்சியினர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஆனந்தன் அய்யாசாமி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
உங்கள் அநீதிகளுக்கு ஒரு அளவே இல்லையா?
முன்னதாக இந்த சம்பவம் குறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அந்த பதிவில், “உங்கள் அநீதிகளுக்கு ஒரு அளவே இல்லையா தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்? தென்காசி மாவட்டம் ஐந்தருவி சாலையில் உள்ள ஒரு பள்ளியில், பள்ளிச் சிறுவர்களை உச்சி வெயிலில் நிற்க வைத்து உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர் உங்களின் கழக உடன் பிறப்புகள்.
தமிழக மாணவர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து உங்கள் இஷ்டம் போல ஆட்டிப் படைப்பது இது ஒன்றும் முதன்முறையல்ல. குறிப்பாக உங்களுக்கு தொடர்புடைய நிகழ்வுகளில் மட்டும் தமிழக பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் பணியாட்களைப் போல நடத்தப்படுவதும், தமிழக துணை முதல்வரான நீங்களே இதுபோன்ற அவலங்களைக் கண்டிக்காமல் ஊக்குவிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உங்கள் தந்தையான தமிழக முதல்வர் ஸ்டாலின், உங்களுக்கு 100/100 மதிப்பெண் வழங்கி அழகுபார்த்தது இதற்குத்தானா? பிறந்தநாள் வாழ்த்து என்பது அன்பின் பேரில் கிடைப்பது என்பதை மறந்துவிட்டு, வாழ்த்து சொல்லச் சொல்லி பள்ளிக் குழந்தைகளை இவ்வாறு கட்டாயப்படுத்துவது தான் திராவிட மாடல் அரசா? உங்களின் தற்பெருமையைத் தம்பட்டம் அடித்துக் கொள்ள தமிழக பள்ளி மாணவர்கள் கிடைத்தார்களா?” என கடுமையாக வானதி கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”மோடியின் முடிவுக்கு கட்டுப்படுவேன்” : ஏக்நாத் ஷிண்டே பேச்சால் கட்சிக்குள் அதிருப்தி!