பழங்குடியினர் சாதி சான்றிதழ்: நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் : ராமதாஸ்

அரசியல்

பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமையும், செம்மையும் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், மலைகுறவர் சமுதாயத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கிடைக்காத மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையைச் சேர்ந்த இவருக்கு மனைவி சித்ரா, 10ஆம் வகுப்பு பயிலும் ஒரு மகன் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

மகனின் பள்ளி படிப்புக்காக சாதி சான்றிதழ் கேட்டு 5 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்ததாகவும், 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சான்றிதழ் வழங்கவில்லை என்றும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த வேல்முருகன் தீக்குளித்தார். அவரை மீட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (அக்டோபர் 12) உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை முன்பு வேல்முருகனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“வேல்முருகனின் குடும்பத்துக்கு, தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். வேலுமுருகன் பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் அவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இவ்விவகாரத்தை சாதரணமாக விட முடியாது. இதுதொடர்பாக தமிழக அரசு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடந்த 100 நாட்களில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கிடைக்காததால் நிகழ்ந்துள்ள இரண்டாவது தற்கொலை இது என்று குறிப்பிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ்,

“இதற்கு முன் கடந்த ஜூலை 4ஆம் தேதி கொண்டாரெட்டி சாதி சான்றிதழ் கிடைக்காததால் பெரியசாமி என்ற முதியவர் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

கொண்டாரெட்டி, மலைக்குறவர் ஆகிய இரு சாதிகளும் பழங்குடியினர் பட்டியலில் முறையே 12, 23 ஆகிய இடங்களில் உள்ளன.

விண்ணப்பித்த ஒரு மாதத்தில் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என விதி உள்ள நிலையில், சாதி சான்றிதழ் மறுக்கப்படுவதுதான் தற்கொலைகளுக்கு காரணம் ஆகும்.

பழங்குடியின சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக இனியும் ஒரு தற்கொலை நிகழக்கூடாது.

இதைக் கருத்தில்கொண்டு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமையும், செம்மையும் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

-ராஜ்

இந்தி திணிப்பு : ஆர்ப்பாட்டம் அறிவித்த உதயநிதி

கிச்சன் கீர்த்தனா : பூண்டு – கீரை – பிரெட் டோஸ்ட்!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.