அம்மா நம்மோடு இருக்கிறார் என்பதற்கு சாட்சியாக, தெய்வ வாக்காக உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது என்று ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது.
நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் அமர்வு, கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் என்றும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பினை வழங்கியுள்ளது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் எடப்பாடி தரப்பைச் சேர்ந்த அதிமுக தரப்பினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடைபெறும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இல்ல திருமணத்தில் பங்கேற்றுள்ளார்.
அப்போது பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விழா மேடையில் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
அவர் பேசுகையில், “அமைச்சரைவையில் நம் தலைவர் பழனிசாமிக்கு ’எடப்பாடி’ என்று பெயர் சூட்டியவர் அம்மா தான்.
இந்த மணவிழா மேடைக்கு வரும்போது அனைவரும் மவுனமாக இருந்தோம். அவர் மேடைக்கு மக்களின் முதல்வர் என்ற பாட்டு பின்னணியில் நடந்து வருவதை பார்க்கும்போது அழகர் நடந்து வருவது மாதிரி இருந்தது.
அதனை உண்மை என்று மெய்ப்பித்துள்ளது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. அம்மா நம்மோடு இருக்கிறார் என்பதற்கு சாட்சியாக, தெய்வ வாக்காக உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. அதன் முதல் வெற்றியாக ஈரோடு இடைத்தேர்தல் அமையும்.
முதல்வர் முக.ஸ்டாலின் எங்கள் தலைவர் எடப்பாடியாருக்கு எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் சிம்ம சொப்பனாமாக இருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களும் எடப்பாடியார் தான் முதல்வர் என்கிற தீர்ப்பினை விரைவில் அளிப்பார்கள்.
உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்புக்கு மத்தியில் 51 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து இதனை வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார், “ என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜெயலலிதாவின் ஆசிக்கு சாட்சி தான் இந்த தீர்ப்பு! – செங்கோட்டையன்
எடப்பாடிக்கு பாலாபிஷேகம்: வெற்றி கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்