ஜெயலலிதாவின் ஆசி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தான் என்பதற்கான உதாரணமாய் உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது.
நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தரப்பினர் இனிப்பை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்தவரையில் பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பு தெளிவாக வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தான் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று அதிமுகவில் புதிய வரலாறு படைக்கக்கூடிய தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது.
நாளை அம்மாவின் பிறந்தநாள், அதற்கு முதல்நாள் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பின் மூலம் ஜெயலலிதாவின் ஆசி எடப்பாடியார் தரப்புக்கு உள்ளது என்பதற்கு எடுத்துகாட்டாய் அமைந்துள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம் வருகின்ற தேர்தல் மாபெரும் வெற்றியை ஈட்டுகிற தேர்தலாக அமையும். “ என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பொதுக்குழு தீர்ப்பு : எடப்பாடி கொடுத்த சீக்ரெட் மெசேஜ்!
தஜிகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!