திமுக நகர செயலாளராக இருக்கும் நகராட்சி சேர்மேன் மீது எஸ்.சி/ எஸ்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நித்யா 2023ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
தன்னை ஏன் பணியிலிருந்து நீக்கம் செய்தீர்கள் என்று பண்ருட்டி நகர்மன்ற சேர்மேனும், திமுக நகர செயலாளருமான கே.ராஜேந்திரன், அப்போதைய நகர்மன்ற ஆணையர் உமாகேஸ்வரி, நகர சுகாதார அலுவலர் முருகவேல் ஆகியோரிடம் நித்யா கேட்டிருக்கிறார்.
அப்போது, சாதிபெயரை குறிப்பிட்டு தன்னை மிரட்டி வெளியே அனுப்பியதாக நித்யா, மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்.
அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பண்ருட்டி காவல் நிலையத்துக்கு ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் பண்ருட்டி காவல் ஆய்வாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதன்பேரில் சமீபத்தில் காவல் ஆய்வாளர் வேலுமணி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதைத் தொடர்ந்து சில தினங்களில் ராஜேந்திரன், உமாமகேஸ்வரி, முருகவேல் ஆகியோர் மீது எஸ்.சி/எஸ்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் நகராட்சி ஆணையர் உமா மகேஸ்வரியிடம் மின்னம்பலம் சார்பாக கேட்டபோது…
“இந்த சம்பவம் 2023ல் நடந்தது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமுதாய கழிப்பிடங்கள் உள்ளது. இங்கு தூய்மை பணி செய்து வந்த நித்யா, ஊதியம் வரவில்லை என்று எங்களிடம் வந்தார். அவரிடம், நீங்கள் இங்கு வேலை செய்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி ஆணை கொடுத்திருக்கிறார்களா… அது இருந்தால் கொண்டு வாருங்கள்.
ஊதியம் வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னோம். ஆனால், அவரிடம் பணி ஆணை இல்லை. பணி ஆணை இல்லாமல் எங்களால் ஊதியம் தரமுடியாது என்றுதான் சொன்னோம். ஆனால், சாதி பெயர் சொல்லி திட்டியதாக தவறாக புகார் கொடுத்துவிட்டார்.
இதுசம்பந்தமாக பண்ருட்டி காவல் நிலையத்தில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன் என்னை அழைத்து கேட்டனர். அங்கு என் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக கொடுத்திருக்கிறேன்” என்றார்.
இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.
“ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் நித்யா புகார் தொடர்பாக சேர்மேன் ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு (குற்ற எண் : 607/2024) செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, விசாரித்து மேல் நடவடிக்கை வேண்டுமா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
திருநம்பிகள் சிக்கினால், ஹமாஸ் என்ன செய்வார்கள்? இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்… நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு!