அதிமுக சார்பில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி நடந்த அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய கள்ளக்குறிச்சி அதிமுக மாசெவும் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு, திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதியை மிகவும் ஆபாசமாக பொதுவெளியில் பேசினார்.
இந்தத் தகவலை அறிந்து திமுகவினர் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுதும் குமரகுருவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம்.க.கார்த்திகேயன், வடக்கு மாசெ உதயசூரியன் எம்.எல்.ஏ. இருவரது மாவட்டங்களிலும் திமுகவினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
மேலும் மாவட்ட எஸ்பியிடமும் குமரகுரு மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார்கள் அளிக்கப்பட்டன. இதன் பேரில் குமரகுரு மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் தன் பேச்சில் தவறு இருப்பதை உணர்ந்த குமரகுரு மறுநாள் செப்டம்பர் 20 ஆம் தேதி, ‘நான் பொதுக்கூட்டத்தில் வாய் தவறுதலாக சில வார்த்தைகளை பேசிவிட்டேன். அதற்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது சமூக தளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக பொதுக்கூட்டத்தில் மாசெ குமரகுரு எங்களது இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதியை பற்றி மோசமான வார்த்தைகளை பேசியிருக்கிறார்.
இதை எதிர்த்து எஸ்பியிடம் புகார் கொடுத்தோம், வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. போராட்டங்களும் திமுக சார்பில் நடந்திருக்கின்றன.
இந்த நிலையில் குமரகுரு தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். மன்னிப்பு கேட்பதாக சொல்லியிருக்கிறார். ஆகவே எங்கள் போராட்டங்களை நாங்கள் நிறுத்தி வைக்கிறோம். இதேபோல் இன்னொரு முறை அவர் பேசினால் கடும் விளைவுகளை சந்திப்பார்” என்று கூறினார்.
இதற்கிடையே அதே 20 ஆம் தேதி நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் திமுக ஒன்றிய செயலாளர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
குமரகுரு எம்.எல்.ஏ. மீது புகார் கொடுப்பதற்காக செப்டம்பர் 20 ஆம் தேதி திமுகவினர் உளுந்தூர் பேட்டை காவல் நிலையத்தின் முன் திரண்டிருந்தனர்.
அப்போது திமுகவின் உளுந்தூர் பேட்டை ஒன்றிய செயலாளரும் நகர்மன்ற துணைத் தலைவருமான வைத்தியநாதன், தன்னை சாதி பெயர் சொல்லித் திட்டியதாகவும் அதிமுக பேனர்களை கிழித்ததாகவும் உளுந்தூர் பேட்டை அதிமுக நகர பொருளாளர் துரை புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் உளுந்தூர் பேட்டை காவல்நிலையத்தில் குற்ற எண் 710/2023 வழக்கு திமுக ஒன்றிய செயலாளரும் நகர் மன்ற துணைத் தலைவருமான வைத்தியநாதன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
147, 148, 294(b), 427, 323,506, (ii) IPC r/w 3 (1) (r), 3(1) (s), 3(2) va, 3(1) (d), 3 (1) (e), SC/ST (POA) Ammendment Act சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, வழக்கு விழுப்புரம் மாவட்ட எஸ்.சி/எஸ்.டி. நீதிபதிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
திமுக தரப்பில் நாம் விசாரித்தபோது, “அன்று காலை காவல் நிலைய வாசலில் திமுகவினர் திரண்டிருந்தபோது அங்கே அதிமுக நகர பொருளாளர் துரை டூவீலரில் வந்திருக்கிறார். அவராகவே சில வார்த்தைகளை திமுகவினரை நோக்கி பேசியிருக்கிறார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதைவைத்து உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர் மீது வன்கொடுமை புகார் கொடுத்திருக்கிறார். அதன்படியே போலீஸும் ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், மேலும் நகராட்சி கவுன்சிலர் முருகவேல் உட்பட திமுகவினர் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
அதுமட்டுமல்ல… இந்த நான்கு பேரையும் உளுந்தூர்பேட்டையில் 210 போலீசாரை கொண்டு மூன்று நாட்களாக தேடியிருக்கிறார்கள். உதயநிதியை ஆபாசமாக திட்டிய புகாரின்மேல் அதிமுக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை இல்லை.
ஆனால் உதயநிதிக்காக போராடச் சென்ற ஒன்றிய செயலாளர் மீது வன் கொடுமை வழக்குப் பாய்ந்திருக்கிறது. போலீசை குவித்து தேடியிருக்கிறார்கள். திமுக ஆட்சியில் திமுகவினரின் நிலையைப் பார்த்தீர்களா?” என்று கேட்கிறார்கள்.
நாம் கள்ளக்குறிச்சி திமுக நிர்வாகிகள் வட்டாரத்தில் இதுகுறித்து கேட்டபோது, “உதயநிதிக்காக புகார் கொடுக்கச் சென்ற திமுக ஒன்றிய செயலாளர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து தெற்கு மாசெவும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு சென்றிருக்கிறார். அமைச்சர் உதயநிதிக்கும் தெரியப்படுத்தப்பட்டது. உதயநிதி மூலம் உளவுத் துறை மற்றும் காவல்துறை மேலதிகாரிகளுக்கும் சில அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன” என்கிறார்கள்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு : டெல்லியில் நடப்பது என்ன?
தெலுங்கில் ’மார்ட்டின் லூதர் கிங்’ ஆக மாறிய ’மண்டேலா’!
எல்லா புகழும் திமுக மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயனுக்கே, அவரது நெருங்கிய உறவினர் தான் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு,
திமுக ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமையில் 15க்கும்மேற்பட்டோர் அதிமுக நகர பொருளாளர் துரை என்பவரை தாக்கியும், அரைநிர்வாணமாக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். (காவல்நிலையம் முன்பாகவே வன்முறையை தடுத்தது காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள்தான்)