மோசடி செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தமிழகத்தை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறி அவர்மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து தான் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க நீதிமன்றத்தில் அளித்த முன்ஜாமீன் மனுவுக்கும் பலனில்லை.
பின்னர் தமிழ்நாட்டை விட்டே தப்பி தலைமறைவு ஆன நிலையில் தமிழக போலீசார் அவரை கர்நாடகாவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எனினும் ராஜேந்திரபாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் கொடுத்ததால் வெளியே வந்தார்.
அதன்படி ராஜேந்திரபாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், வெளியூர்களுக்கு எங்கும் செல்லக்கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
பின்னர் தமிழகத்தைவிட்டு எங்கேயும் தப்பி செல்லக் கூடாது என நிபந்தனை தளர்த்தப்பட்டது.
ராஜேந்திர பாலாஜி மனு நிராகரிப்பு!
இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கில் தமிழகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக நடைபெற்ற இன்றைய விசாரணையின் போது, ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான அனைத்து விசாரணைகளும் முடிவடைந்துவிட்டன. அவர் மீதான இந்த மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அடுத்த 45நாட்களில் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீனில் மேலும் தளர்வு செய்ய முடியாது என தெரிவித்து அவரது மனுவையும் நிராகரித்துவிட்டது.
கிறிஸ்டோபர் ஜெமா
FIFA Worldcup 2022 : ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சியூட்டும் கத்துக்குட்டி அணிகள் – 1
அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி யார்? ஆறு பேர் பட்டியல்!