விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான சனாதன விவகாரத்தில் தற்போது உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 29) தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது தேசிய அளவில் பேசு பொருளானது.
இந்த மாநாட்டில் அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றதன் மூலம் அரசமைப்பு சாசனத்தின் பிரிவுகள் மீறப்பட்டுள்ளது. சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு பயங்கரவாத அமைப்பு நிதி வழங்கியதா என்பதை சிபிஐ விசாரிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று ஜெகநாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், பெலாஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றது ஏன்? சனாதனத்திற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தது ஏன்? என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கு இன்று (நவம்பர் 29) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜிண்டால் ஆஜராகி, “அமைச்சர் உதயநிதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சரே வெறுப்பு பேச்சை ஊக்குவிக்கின்ற வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதுபோன்ற மாநாடுகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்குகிறது. எனவே இதற்கு தடைவிதிக்க வேண்டும்” என்று நீதிபதிகளிடம் முறையிட்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், “தனிநபர்கள் தொடர்பான வழக்கு விசாரணையில் தற்போது தலையிட முடியாது. தனி நபர் வழக்குகள் விசாரணைக்கு பட்டியலாகும் போது பார்க்கலாம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான சனாதன விவகாரத்தில் தற்போது உத்தரவு பிறப்பிக்க முடியாது.
மேலும் ”இந்தியா முழுவதும் 28 மாநிலங்களில் வெறுப்பு பேச்சு தொடர்பான வன்முறையை தடுக்க நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா, மேற்கு வங்கம், நாகாலாந்து, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் ஏன் நோடல் அதிகாரிகளை நியமிக்கவில்லை” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து கேரளா, மேற்கு வங்கம், நாகாலாந்து, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் இது தொடர்பான மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் 4 மாநிலங்களும் பங்கேற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சுரங்க விபத்து: மீட்பு பணியில் கைகொடுத்த திருச்செங்கோடு ரிக் இயந்திரம்!
பழைய ஹிட் படத்தின் டைட்டிலில் நடிக்கும் ஜெயம் ரவி: இயக்குனர் இவரா?