ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 21) உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்கு தொடர்பாக சூரத் நீதிமன்றம் அளித்த 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் பி.ஆர்.கவாய், பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இரு நீதிபதிகளில் ஒருவரான பி.ஆர்.கவாய், தனது தந்தை மற்றும் சகோதரர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வழக்கினை விசாரிக்க தயக்கம் காட்டி விலகுவதாக அறிவித்தார்.
அதற்கு, ”நீங்கள் இந்த வழக்கை விசாரிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று ராகுல்காந்தி மற்றும் புருனேஷ் மோடி தரப்பைச் சேர்ந்த இரு வழக்கறிஞர்களும் நீதிபதி பி.ஆர். கவாயிடம் தெரிவித்தனர். அதையடுத்து அவர் அமர்வில் இருக்க சம்மதித்தார்.
இதன்பின், தொடங்கிய விசாரணையில், ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு வழக்குதொடுத்த புருனேஷ் மோடியும், குஜராத் அரசும் 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழக்கு விசாரணையும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
வழக்கின் பின்னணி!
கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவின் கோலாரில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், “நீரவ் மோடி, லலித் மோடி… அது எப்படி எல்லா திருடர்களுக்கும் ‘மோடி’ என்பது பொதுவான குடும்பப்பெயராக இருக்கிறது?” என்று பேசினார்.
இதுகுறித்து பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ புருனேஷ் மோடி, ”மோடி என்ற குடும்பப்பெயரை ராகுல்காந்தி அவமானப்படுத்தியதாக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல்காந்தியை குற்றவாளி என தீர்ப்பளித்து இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம். இதனை எதிர்த்து ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம்.
அதன் தொடர்ச்சியாக தற்போது, தனது சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்த நிலையில், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
மணிப்பூர் விவகாரம்: இரு அவைகளும் ஒத்திவைப்பு!
500 வது சர்வதேச கிரிக்கெட்: விராட் கோலி அரைசதம்!