இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 5) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 14வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குறிப்பாக இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முறையான தீர்ப்பை வழங்கியுள்ளது. எனவே அதில் தலையிட வேண்டிய அவசியம் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை.
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும். ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதன் அடிப்படையில் தான் உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பிறந்தநாளன்று கலைஞர் நினைவிடத்தில் கனிமொழி எம்.பி மரியாதை!
சூரியின் கருடன் ஷூட்டிங் ஓவர்… யாரோட கதையில நடிச்சிருக்காரு பாருங்க!