நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 11) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஒட்டுமொத்த நீதித்துறையும் ஊழலில் நிறைந்திருக்கிறது என்று கடந்த ஜூலை 22ஆம் தேதி யூடியூப் சேனல் ஒன்றில் சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சவுக்கு சங்கர் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தது.
இதையடுத்து அவர் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி அமர்வு இன்று (நவம்பர் 11) விசாரித்தது.
அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்,
இந்த இடைக் காலத்தில் இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் சங்கர் தெரிவிக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தனர்.
மேலும், “எங்கள் மீது விமர்சனங்களை வைக்க வேண்டாம் என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அதற்கென்று ஒரு வரைமுறை வேண்டும் என்று தான் சொல்கிறோம்.
எந்த ஆதாரங்களும் இல்லாமல் நீதித்துறை மீது இத்தகைய குற்றச்சாட்டுகளைச் சவுக்கு சங்கர் எப்படி வைத்தார்” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சிறைத் தண்டனைக்கு எதிராகச் சவுக்கு சங்கர் தொடர்ந்த மனு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரியா
15 மாதத்தில் 1.5 லட்சம் இலவச மின்இணைப்புகள்: முதலமைச்சர் பெருமிதம்!
ட்விட்டர் திவால்: எலான் மஸ்க் தரும் ஷாக்!