தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று (ஜனவரி 18) புகார் அளித்துள்ளார்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படங்கள் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த 11ம் தேதி வெளியானது.
எனினும் முதல்நாளில் தமிழ்நாடு முழுவதும் துணிவு படத்திற்கு அதிக திரையரங்குகளும், காட்சிகளும் கொடுக்கப்பட்டதாகவும்,
பின்னர் இரு படங்களின் சிறப்பு காட்சிகளும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உத்தரவுபடியே ஒதுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
”தமிழக முதல்வர் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி ஆகிய 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு சட்டம், கூட்டு சதி மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிய லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
மேலும், ”வாரிசு மற்றும் துணிவு என இரண்டு திரைப்படங்களும் சட்ட விரோதமாக 950ற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
எனது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்ததாக நீதிமன்றம் மற்றும் ஆளுநரை சந்திப்பேன்.” என்று சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ”கடந்த 11ம் தேதி வெளியான துணிவு, வாரிசு ஆகிய திரைப்படங்களின் சிறப்புக்காட்சிக்கு திரையிட சட்டவிரோதமாக முதல்வர் ஸ்டாலின் அனுமதித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் மு.க.ஸ்டாலின் தனது பினாமி நிறுவனமான தனது மகன் நடத்தும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு அதிகளவில் லாபம் ஈட்ட உதவியுள்ளார்.
மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் பனீந்திர ரெட்டி ஐஏஎஸ் மீது கூட்டுச் சதி, அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மீறல், கிரிமினல் முறைகேடு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி புகார் அளித்துள்ளேன்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் துணிவு படத்தை தமிழ்நாடு முழுவதுமாகவும், வாரிசு படத்தை முக்கிய ஏரியாக்களான சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களிலும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல்!
“அந்தக் காலத்தில் தமிழ்நாடு இல்லை” – மீண்டும் சர்ச்சையில் ஆளுநர்!