வலுத்த கண்டனங்கள்: பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் விடுவிப்பு!

அரசியல்

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாகக் கட்டுரை எழுதியதற்காக மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் இன்று (செப்டம்பர் 11) கைது செய்யப்பட்ட நிலையில், பத்திரிகையாளர் சங்கங்கள், அரசியல் பிரமுகர்களின் கண்டனங்கள் வலுத்த நிலையில், சாவித்திரி கண்ணனை இன்று மாலை விடுவித்துள்ளது போலீஸ்.

சென்னை பிரஸ் கிளப்பின் இணை செயலாளர் பாரதி தமிழன் இதுகுறித்த விடுத்த செய்தியில்,

”மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் (57) தமிழகத்தின் முன்னோடி பத்திரிகையாளரான இவர் மகாகவி பாரதியின் நினைவு நாளில் (11-09-2022 ) சென்னையில் அவரது வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருப்பது ஆழ்ந்த அதிர்ச்சியை உண்டாக்குகிறது.

இன்று முற்பகலில் சீருடை அணியாத நான்கு போலீசார் அவருடைய வீட்டிற்குள் வந்து அவரை கைது செய்திருக்கின்றனர்.

அவருடைய செல்போனையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். அவருடைய மனைவியின் செல்போனையும் வாங்குவதற்கு முயற்சித்து உள்ளனர்.

சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறோம்‌ என்று அவர் மனைவியிடம் சொல்லிவிட்டு, கிழக்குக் கடற்கரைச் சாலையில் காரை செலுத்தி உள்ளனர்.

பின்னர், அங்குமிங்குமாக விசாரித்த பிறகே சாவித்திரி கண்ணனைக் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் துறையினர் கைதுசெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு பத்திரிகையாளரை நீதிமன்ற வழிகாட்டல்களுக்கு முரணாக, சீருடையில் இல்லாத காவல் துறையினர் தடாலடியாக வீட்டிற்குள் நுழைந்து,

எவ்விதத் தகவல்களும் தராமல், இப்படிக் கைதுசெய்திருப்பது மிக மோசமான செயல்.

அரசு ஒருவேளை உண்மைக்குப் புறம்பானது, சட்ட நடைமுறைக்கு ஒவ்வாதது என்று ஏதேனும் செய்தியைக் கருதுமாயின் அப்படியான செய்திகளையும், செய்தியாளர்களையும் எதிர்கொள்ள ஜனநாயகத்தில் சட்டப்பூர்வமான வழிமுறைகள் நிறைய உள்ளன.

தமிழக அரசு அத்தகைய ஜனநாயக வழிமுறையைத்தான் கையாள வேண்டுமே அன்றி, இத்தகைய அடக்குமுறை வழியைக் கையாளக் காவல் துறையை அனுமதிக்கக் கூடாது.

அந்த வகையில் 35 ஆண்டுகளாகத் தமிழகப் பத்திரிக்கை உலகில் நன்கு அறியப்பட்ட மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் மீதான இந்தக் கைது நடவடிக்கையைச் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும் உடனடியாக தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் அவர்களை விடுவிக்க ஆவண செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.

மாற்றத்துக்கான ஊடகவியலாளர் சங்கத்தினரும் சாவித்திரி கண்ணன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் வன்னியரசு, நாம் தமிழர் சீமான் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் திண்டிவனம் ஒலக்கூர் காவல்நிலையம் வரை சாவித்திரி கண்ணனை அழைத்துச் சென்று விசாரித்த சைபர் க்ரைம் காவல்துறையினர் இன்று மாலை அவரை விடுவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மோனிஷா

சிறையில் இருந்து வெளியில் வந்த கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள்!

+1
1
+1
0
+1
2
+1
4
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *