திகார் சிறையில் இருக்கும் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை, சிறைக் கண்காணிப்பாளர் சந்தித்தது தொடர்பான வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லி மாநில சுகாதாரத் துறை அமைச்சரான சத்யேந்திர ஜெயின், தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சிபிஐ கடந்த 2017ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
அதனடிப்படையில், அமலாக்கத்துறை மூலம் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட சத்யேந்திர ஜெயின் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், திகார் சிறையில் சத்யேந்திர ஜெயின் தங்கியிருந்த அறையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் சமீபத்தில் பரவியது.
அதில் சத்யேந்திர ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்துவிடும் வீடியா காட்சிகளும், வெரைட்டி உணவுகளைச் சாப்பிடும் காட்சிகளும் அடுத்தடுத்து வெளியாகி ஆம் ஆத்மிக்கு நெருக்கடியை ஏற்படுத்தின.
இந்த நிலையில், சத்யேந்திர ஜெயின் தொடர்பான மேலும் சில சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தற்போது வெளியாகி இருக்கும் சிசிடிவி காட்சியில், சத்யேந்திர ஜெயினிடம் திகார் சிறை கண்காணிப்பாளர் அஜித் குமார் (தற்போது சஸ்பெண்ட்) வந்து பேசுவதுபோல காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறையில் சத்யேந்திர ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்துவிடும் வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் சிறை கண்காணிப்பாளர் அஜித் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனவல்லா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,
”சத்யேந்திர ஜெயினுக்கு சிறைச்சாலை என்பது தண்டனை அனுபவிக்கும் இடமாக இல்லை. சொகுசு வாழ்க்கைக்கான இடமாக உள்ளது” என்று விமர்சித்திருக்கும் அவர், “சிறையில் இருக்கும் ஒரு நபருக்கு இப்படி வசதி கிடைத்தது எப்படி என்பது குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு எதிரான திகார் சிறை வீடியோ காட்சிகள் வெளியாகி வருவது, ஆம் ஆத்மிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஜெ.பிரகாஷ்
“இந்தியா முன் புதிய வாய்ப்புகள் குவிகின்றன” – பிரதமர் மோடி
பாஜக கிளப்பிய பாகிஸ்தான் ஜிந்தாபாத்: பதிலடி கொடுத்த காங்கிரஸ்