தமிழ்நாடு அரசு பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகையை இந்த மாதம் வழங்குவதற்கு தடையேதுமில்லை என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
திமுக கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அறிவித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் 1000 ருபாய் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 7 மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் இச்சூழலில் ஏப்ரல் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா என்ற சந்தேகம் மக்களிடையே நிலவியது.
இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு இன்று (ஏப்ரல் 12) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “தேர்தல் நேரத்தில் அரசு தொடர்ந்து வரும் திட்டங்களுக்கு எந்த தடையுமில்லை என தேர்தல் விதிகளில் உள்ளது. அதன்படி மாதந்தோறும் பெண்களுக்கு வழங்கி வரும், மகளிர் உரிமை தொகையை வழக்கம்போல இந்த மாதமும் வழங்க எந்த தடையும் இல்லை. அந்த பணிகள் தொடரலாம். இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் எந்த அனுமதியும் பெற தேவையில்லை என தெரிவித்தார்.
மேலும், “மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் இதுவரை 70 சதவீதம் அதாவது 4.36 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நாளையுடன் முடிவடையும்.
புதிய வாக்காளர்களுக்கு இந்த முறை 100 சதவீதம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடியை வருமானவரித்துறை கைப்பற்றி உள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் மாற்றப்படுவதாக வரும் செய்திகள் உண்மை இல்லை. அக்கட்சிக்கு வழங்கப்பட்ட மைக் சின்னம் தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த பணிகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள் என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிரபல தமிழ் வில்லன் நடிகர் மரணம்… திரையுலகினர் சோகம்!
Thalapathy 69: டிவிவி போனா என்ன?… துணிந்து களமிறங்கும் விஜய்… தயாரிப்பாளர் யாருன்னு பாருங்க!