சாத்தான்குளம் போலீசார் தாக்கி மரணமடைந்த வழக்கில், சிபிஐ போலீசார் இன்று (ஆகஸ்ட் 12) 400 பக்க கூடுதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு காவல் துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சி.பி.ஐ. போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் 9 போலீசார் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. போலீசார் தாக்கல் செய்தனர். அதில் மொத்தம் 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டு இருந்தன. இதைத் தொடர்ந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டது சம்பந்தமாக கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 12) சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குள் நுழைந்த சிபிஐ அதிகாரிகள், அங்கு சீல் வைக்கப்பட்ட எஸ்.ஐ. ரகு கணேஷின் அறையில் இருந்த சீலை அகற்றி அதில் இருந்த வழக்கு சம்பந்தமான முக்கியமான ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல்!
மேலும், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை கொடூரமாக தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட மரடேபிளையும் பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள் அதையும் கொண்டுசென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 12) மதுரை மாவட்டம் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான சிபிஐ வழக்கறிஞர் தரப்பில், சாத்தான்குளம் சம்பந்தமான 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது.
அத்துடன், ஜெயராஜை சாத்தான்குளம் போலீஸ் அழைத்துச் சென்ற வீடியோ பதிவு காட்சிகளும், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது உடலில் இரத்தக்கரை மற்றும் ரத்தம் வடிந்த ஆடையின் வீடியோ பதிவுகளையும் சிபிஐ போலீசார் தாக்கல் செய்தனர்.
மேலும், ஜெயராஜ், பென்னிக்ஸின் ரத்தக்கறை படிந்த ஆடைகளை தடயவியல் துறை ஆய்வு செய்து அளித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. தவிர, பென்னிக்ஸ் செல்போனில் பேசியது தொடர்பான விவரங்கள் குறித்து செல்போன் நிறுவன அதிகாரியும் சாட்சியம் அளித்தார்.
சிபிஐ போலீசார் அளித்த இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பலர் முக்கியச் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் வரும் நாட்களில், இந்த சாட்சிகளின் விசாரணை தீவிரமடையும் எனத் தெரிகிறது.
ஜெ.பிரகாஷ்
நாவில் எச்சில் ஊற வைக்கும் உணவுகள்: தீவு திடலில் குவியும் சாப்பாட்டு பிரியர்கள்!