பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் இன்று (டிசம்பர் 22) அடித்துச் சேதப்படுத்தி உள்ளனர்.
தூத்துக்குடியில், பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (டிசம்பர் 21) நடைபெற்றது. இதில், சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன்.பால கணபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய சசிகலா புஷ்பா, தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் உழைத்து கொண்டிருக்கும், மக்களுக்காக உழைக்கும் அவரை பற்றிப் பேச தகுதி இல்லை. மரியாதையாக பேசச் சொல்லி கொடுத்த பண்பு பாஜக. ஒருமையில் பேசும் பழக்கம் பாஜகவிற்கு இல்லை” என்றவர், அமைச்சர் கீதாஜீவனை மிரட்டும் வகையில், “நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்போது கால் இருக்காது, நாக்கு இருக்காது” என ஆவேசமாகப் பேசினார்.
அவர் அப்படிப் பேசியதற்குக் காரணம், “அண்ணாமலை மேடையில் ஏறும்போது நாங்கள் மேடையில் ஏறுவோம்” என அமைச்சர் கீதாஜீவன் சமீபத்தில் பேசியிருந்தார். அதற்கு பதிலடி அளிக்கும் வகையிலேயே சசிகலா புஷ்பா, இப்படிப் பேசியிருந்தார்.
ஏற்கெனவே திமுகவுக்கும், பாஜகவுக்கும் வார்த்தைப்போர் முற்றிவரும் நிலையில், அதிலும் அண்ணாமலையின் ’வாட்ச்’ போர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கேள்விகளால் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், முன்னாள் அதிமுக எம்பியாக இருந்து, தற்போது பாஜகவுக்கு மாறிய சசிகலா புஷ்பாவுக்கும், தற்போதைய அமைச்சர் கீதாஜீவனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
அதன் ஒருபகுதியாக, சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் கண்ணாடி ஆகியவற்றை மர்ம நபர்கள் இன்று (டிசம்பர் 22) அடித்துச் சேதப்படுத்தி உள்ளனர். இது, பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அவரது வீட்டு கதவு, ஜன்னல் கண்ணாடிகள், பூந்தொட்டிகள், கார் கண்ணாடி ஆகியவற்றை இன்று உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சிப்காட் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெ.பிரகாஷ்
கரூர் பஞ்சாயத்துத் தேர்தல்: முடிவை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு!
அப்பாக்களைக் காக்கும் மகள்கள்: சட்டப் போராட்டத்தில் ஜெயித்த கேரள சிறுமி!