டிஜிட்டல் திண்ணை: கையில் கட்டுடன் சசிகலா… தஞ்சை திருமணத்தில் மூவர் சந்திப்பு நிகழுமா?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், டிடிவி தினகரன் சந்திப்பு  படங்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அதை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“வரும் ஜூன் 7 ஆம் தேதி தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சரும் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கத்தின் இளைய மகன் திருமணம் நடைபெற உள்ளது.  இந்த திருமணம் வைத்திலிங்கத்தின் தனிப்பட்ட குடும்ப விழாவாக மட்டுமல்லாமல் அதிமுகவில் கணிசமானோர் எதிர்பார்க்கும் ஓர் இணைப்பு விழாவாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மே 29ஆம் தேதி சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்தார் வைத்திலிங்கம். தனது மகன் திருமண பத்திரிகையை அளித்து திருமணத்துக்கு வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்டார் தினகரன். இதற்காகவே திருமண தினமான ஜூன் 7 ஆம் தேதி ஏற்கனவே அமமுகவின் செயற்குழு கூட்டம் என்ற முடிவை மாற்றி இருபதாம் தேதிக்கு அதை தள்ளி வைத்தார். இதன் மூலம் டிடிவி தினகரன் தஞ்சாவூர் திருமணத்தில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்துகிறார்கள் அமமுகவினர். 

தினகரனை சந்தித்து விட்டு சசிகலாவை சந்திக்க திட்டமிட்டிருந்தார் வைத்திலிங்கம்.  ஒரு நாள் காத்திருந்து மே 31ஆம் தேதி மாலை சென்னையில் சசிகலாவின் இல்லத்துக்கு சென்றார் வைத்திலிங்கம். அப்போது சசிகலா கையில் கட்டு போட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

’என்னம்மா ஆச்சு?’ என்று கேட்க  ’லேசான எலும்பு முறிவு’ என்று தெரிவித்த சசிகலா கை கட்டுடன் இருப்பதனால்   புகைப்படம், வீடியோ வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.  சில நாட்களில் கட்டு அகற்றப்பட்டு விடும் என்றும் திருமணத்திற்கு தான் வருவதாகவும் வைத்திலிங்கத்திடம் தெரிவித்துள்ளார். 

அப்போது வைத்திலிங்கம், ‘அம்மா… டெல்லியில் இருந்து எடப்பாடியிடம் நம் எல்லோரையும் அட்ஜஸ்ட் பண்ணி தான் போக சொல்றாங்க. ஆனால் ஓபிஎஸ், டிடிவி, நீங்க ஆகிய மூன்று பேருக்கும் இடையிலேயே புரிந்துணர்வு இல்லை என்று எடப்பாடி அவர்களிடம் சொல்லியிருக்கிறார். அதன் மூலமாகவே டெல்லி அறிவுறுத்தலை அவர் தட்டிக் கழித்து வருகிறார்.

’நீங்க மூன்று பேரும் இன்னும் முன்பே சந்தித்திருக்க வேண்டும். ஆனால் என் வீட்டு கல்யாணம் அதற்கு வாய்ப்பாக இருப்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இந்த திருமணத்தின் மூலம் அதிமுக தொண்டர்களிடத்திலும் ஒரு பாதுகாப்பு உணர்வு வரும்’  என்று கூறியிருக்கிறார் வைத்திலிங்கம்.

வரும் ஜூன் 7 ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் தனது இல்ல திருமணத்திற்காக அமுமுக மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் திருமண பத்திரிகை வைத்துள்ள வைத்திலிங்கம், அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் சிலருக்கும் பத்திரிக்கை வைத்து அழைத்துள்ளார்.

இந்த திருமண விழாவில் ஓ பன்னீர்செல்வம் ,டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் ஒன்றாக கலந்து கொள்வதன் மூலம்… எடப்பாடிக்கு டெல்லியின் நெருக்கடி அதிகரிக்கலாம் என்பது ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கணக்கு” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப். 

எதிர்க்கட்சிகள் மீட்டிங்: தேதியை மாற்றக் கோரும் மு.க.ஸ்டாலின்

தாய்லாந்து ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்

+1
0
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *