சசிகலாவின் ஆடி டூர்…செல்லுபடியா? தள்ளுபடியா? தென்காசியை செலக்ட் பண்ணிய பின்னணி என்ன?

Published On:

| By Selvam

சேர்ந்து இருக்க வேண்டியவர்களை பிரித்து வைப்பதுதான் ஆடி மாதம். ஆனால், பிரிந்து கிடக்குற அதிமுகவை சேர்த்து வைப்பதற்காக இந்த ஆடி மாதத்தில் அரசியல் டூர ஸ்டார்ட் பண்ணியிருக்கிறார் சசிகலா.

இன்னமும் தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்று சொல்லிக் கொள்கிற சசிகலா அம்மா வழியில் மக்கள் பயணம் என்ற பெயரில் தென்காசியில் இருந்து அரசியல் பயணத்தை ஆடி 1 ஆம் தேதி முதல், அதாவது ஜூலை 17 ஆம் தேதி முதல் தொடங்கியிருக்கிறார்.

2021 இல் சிறையில் இருந்து வெளிவந்த நிலையில், அரசியலில் இருந்து சற்றே ஒதுங்கியிருக்கப் போவதாக அறிவித்தார் சசிகலா. அதன் பின் டிடிவி தினகரனே அவரிடம் இருந்து ஒதுங்கினார். இதற்குப் பிறகு அவ்வப்போது, ‘அதிமுக ஒன்றுபடனும், 80 சதவீதம் ஒன்று பட்டுச்சு 90 சதவீதம் ஒன்று பட்டுச்சு. விரைவில் நல்லது நடக்கும்’ என்றெல்லாம் ஆரூடம் கூறிவந்தார்.

ஈரோடு, சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடி உள்ளிட்ட நிறைய ஊருக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். அதுவும் சரிவரவில்லை. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்ததோடு, சில இடங்களில் டெபாசிட்டையே பறிகொடுத்தது.

இந்த நிலைமையில் தான் அதிமுக மறுபடியும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ், சசிகலா, தினகரன் எல்லோரும் கோரசாக குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த அரசியல் சூழ்நிலையில தான் ஜூலை 17ஆம் தேதி அதாவது ஆடி 1ஆம் தேதி சசிகலா தென்காசியில் இருந்து தன்னுடைய அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

அதிமுகவை ஒன்றிணைப்பதற்காக சசிகலா தொண்டர்களை சந்திக்கிற இந்த பயணத்துக்கு தென்காசி மாவட்ட எஸ்பி யிடம் சசிகலா சார்பாக வழக்கறிஞர் பூசைத்துரை மனு கொடுத்தார். உடனே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா சுற்றுப்பயணம் செய்ய அனுமதிக்க கூடாது என்று அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சிவகுமார் பதில் மனு கொடுத்தார்.

இதற்கு உடனடியாக சசிகலா தரப்பு சார்பாக தென்காசி எஸ்பியிடம் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு தான் சசிகலாவின் இந்தப் பயணத்துக்கு போலீஸ் அனுமதி கிடைத்திருக்கிறது. பயணம் போவதற்கு மட்டுமல்ல… அதிமுக கொடி கட்டவும், அதிமுக சின்னத்தைப் பயன்படுத்தவும் போலீஸ் எந்தத் தடையும் விதிக்கவில்லை.
ஜூலை 17 மாலை சசிகலா சுற்றுப்பயணத்தை தென்காசியில் தொடங்கினார். குற்றாலத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்த சசிகலா ஜூலை 17 மாலை அங்கிருந்து அதிமுக கொடி கட்டிய வேனில் கிளம்பினார்.

காசி மேஜர் புரத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய சசிகலா கீழப்புலியூர், மேல பாட்டா குறிச்சி, சுந்தரபாண்டியபுரம், திருச்சிற்றம்பலம், மேலப்பாவூர், துவரங்காடு விளக்கு, குறுங்காவனம், சுரண்டை, விகேபுதூர், வீராணம், ஊத்துமலை போன்ற பகுதிகளில் தன்னுடைய பிரச்சார வேனில் இருந்தபடியே அங்கே திரண்டு இருந்த மக்களிடம் பேசினார்.

சசிகலாவுடைய பேச்சில் பெரும் பகுதி ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை தாக்குவதில் தான் இருந்தது. ‘எம்ஜிஆர் காலத்திலையும் ஜெயலலிதா காலத்திலையும் ஏகப்பட்ட நலத்திட்டங்கள் கொண்டு வந்தோம். ஆனால் ஸ்டாலின் ஆட்சியில் அந்த திட்டங்கள் எல்லாம் முடக்கப்பட்டு விட்டது. 2026 இல் மீண்டும் அம்மா ஆட்சி அமைந்ததும் அந்தத் திட்டங்கள் மறுபடியும் நடைமுறைப்படுத்தப்படும்’ என சசிகலா பல இடங்களில் பேசினார். ‘ எல்லோரும் ஒற்றுமையாக இருந்து அம்மா ஆட்சி வருவதற்கு துணையாக இருக்கணும்’ என்றும் குறிப்பிட்டார் சசிகலா. அவர் பேசிய பேச்சின் பெரும்பகுதி திமுக அரசை அட்டாக் செய்யும்விதமாகவே இருந்தது.

’எடப்பாடி ,பன்னீர் எல்லாம் வந்தால் திறந்த வேன்ல வந்து நம்மள பார்த்து பேசுறாங்க. இந்த அம்மா என்னடான்னா கதவை சாத்திக்கிட்டு வேனுக்கு உள்ள உக்காந்துகிட்டு பேசிட்டு இருக்காங்க’ என சில அதிருப்தி குரல்களும் பயணத்தில் கேட்டது.

அதெல்லாம் சரி… சசிகலா இந்த பயணத்தை தொடங்குவதற்கு ஏன் தென்காசியை செலக்ட் செய்தார்?
சசிகலா வட்டாரத்திலும், தென்காசி வட்டாரத்திலும் விசாரித்தபோது இதற்கு மூன்று காரணங்களைச் சொன்னார்கள்.
”சசிகலா எப்பவுமே ஜோதிடர்கள் ஆலோசனைப்படி தான் நடக்கிறவங்க. அந்த வகையில அவரோட ஆஸ்தான ஜோதிடர் நீங்க குற்றாலத்தில் தங்கிட்டு அங்கிருந்து கிளம்பி பயணத்தை ஆரம்பிங்கனு அட்வைஸ் பண்ணி இருக்காங்க. அந்த அடிப்படையில தான் தென்காசிய செலக்ட் பண்ணதா சசிகலாவுக்கு நெருக்கமான ஜோதிட வட்டாரங்கள் சொல்றாங்க.

இன்னொரு காரணம், அதிமுகவுல ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு முக்கிய புள்ளி இன்னமும் வலிமையாக அரசியல் செஞ்சுகிட்டு இருக்காங்க. கோவை எடுத்துக்கிட்டா வேலுமணி, விழுப்புரத்தை எடுத்துக்கிட்டா சி.வி.சண்முகம். நாமக்கல்ல எடுத்துகிட்டா தங்கமணி, தூத்துக்குடியில கடம்பூர் ராஜு, மதுரையில செல்லூர் ராஜு, உதயகுமார், விருதுநகர்ல ராஜேந்திர பாலாஜி இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு அதிமுக புள்ளி வலுவா இருக்காங்க.

ஆனா தென்காசியில அப்படி யாருமே இல்ல. இன்னும் சொல்லப்போனா கடந்த நாடாளுமன்ற தேர்தல்ல தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்காசி சட்டமன்றத் தொகுதியில பாஜகவை விட அதிமுக 13,000 ஓட்டு கம்மி. கடையநல்லூர்ல அதிமுகவை விட திமுக 42 ஆயிரம் ஓட்டு அதிகம். இங்கேயும் அதிமுக மூணாவது இடம். ஆலங்குளத்தில் நாம் தமிழருக்கும் அதிமுகவுக்கும் 2,000 வாக்கு வித்தியாசம் தான்‌. அதிமுகவுக்கு டெபாசிட் போயிடுச்சு.

இப்படி அதிமுகவுல களத்துல எதிர்த்து நிற்பதற்கு யாருமே இல்லாத ஒரு மாவட்டமா தென்காசி இருக்கு.
இங்கே பிரச்சாரத்தை தொடங்கினா எடப்பாடி தரப்போட எதிர்ப்பு வலுவா இருக்காதுன்னு தெரிஞ்சுகிட்டு தென்காசிய சசிகலா செலக்ட் பண்ணி இருக்காங்க.

இதைவிட இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கு… ஜூலை 17ஆம் தேதி சசிகலா தன்னுடைய பயணத்தை ஆரம்பிச்ச காசி மேஜர் புரம், எலச்சி, கீழப்புலியூர், வீராணம் , 18ஆம் தேதி அவங்க போன அச்சன்புதூர் இப்படி எல்லாமே முக்குலத்தோர் பெல்ட். இங்க முக்குலத்து பெண்கள் கூட்டம் கூட்டமாக சசிகலாவை பார்க்க வர்றாங்க.
இப்படி ஜோதிடம், அரசியல், சாதி அப்படிங்கற மூன்று முக்கியமான காரணத்தோடு தான் சசிகலா தென்காசியில் தன்னோட பயணத்தை ஆரம்பிச்சு இருக்காங்க” என்கிறார்கள்.

இதற்கிடையே, ‘கறந்த பால் மடி புகாது. கருவாடு மீன் ஆகாது. சசிகலா அதிமுகவுக்குள் வரமாட்டார். அவர் ஜானகி அம்மையாரைப் போல ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அவர் செய்வது அரசியல் சுற்றுப் பயணம் அல்ல. ஆடி மாத சுற்றுலா பயணம்” என்று கடுமையாக விமரிசித்திருக்கிறார் எடப்பாடிக்கு நெருக்கமான ஆர்.பி உதயகுமார்.
ஆடி மாதத்தில் சசிகலா ஆரம்பித்திருக்கிற இந்த பயணத்தால் அதிமுக ஒன்றிணைமா? சசிகலாவுடைய இந்த ஆடி மாச பயணம் அதிமுகவில் செல்லுபடி ஆகுமா… இல்ல ஆடி தள்ளுபடி ஆகிவிடுமா…. பொறுத்திருந்து பார்ப்போம்!

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்: அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

வார இறுதியில் உச்சம்: இந்த பங்குகளை நோட் பண்ணுங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment