“எடப்பாடி பழனிசாமி யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக்கொண்டு, இந்த கட்சியை அழிக்க முயற்சி செய்கிறார்” என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கமும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா தோழியுமான சசிகலாவும்,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே இன்று (செப்டம்பர் 9) எதிர்பாராதவிதமாகச் சந்தித்துக்கொண்டனர்.
பின்னர் இந்த சந்திப்பு குறித்து இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், “இந்த சந்திப்பு எதார்த்தமானது.
அரசியல்ரீதியாக சந்திப்பு நிகழுமானால் அது உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் நடக்கும்.
அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த இயக்கத்திலிருந்து பிரிந்து நிற்கும் அனைவரையும் ஒன்றிணைப்பதுதான் எங்களது முதல் நோக்கம். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
ஓ.பன்னீர்செல்வம் மன்னிப்பு கேட்டாலும் அவரை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கும் ஒரு கருத்தை,
எந்தக் கடைக்கோடி தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். அவர், இப்படிச் சொல்வதில் உள்நோக்கம் இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி எப்படி இந்த அரசியலுக்கு வந்தார், எப்படி இந்த முதலமைச்சர் பதவியைப் பெற்றார், இந்தக் கட்சியை அவர் எப்படி அபகரிக்க நினைக்கிறார் என்பது கடைக்கோடி தொண்டன் வரை நன்கு தெரியும்.
அவருடைய ஆணவப் போக்கிற்கு தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். அதிமுக அலுவலகத்தில் காணாமல் போன பொருட்களைப் பட்டியலிட்டால், அதற்கு நாங்கள் தக்க பதில் சொல்வோம்.
எங்களுக்கு ஒற்றுமை தேவை. எல்லோரும் இணைய வேண்டும். ஜெயலலிதா ஆசியின்படி இந்த இயக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்.
நெடுங்காலம் இந்தக் கட்சி சிறப்போடும் வலுவோடும் இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தொண்டனின் எண்ணம். அதைத்தான் நாங்கள் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி, தன்னைக் ஔறகாப்பாற்றிக் கொள்வதற்காக இந்த கட்சியை அழிக்க நினைக்கிறார்.
இதை தொண்டர்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள். அவர் யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக்கொண்டு, இந்த கட்சியை அழிக்க முயற்சி செய்கிறார். திமுக ஆட்சியில் திட்டங்கள் நன்றாக இருப்பதால் அதைப் பாராட்டுகிறோம்.
அதேநேரத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்த சொல்கிறோம்.
நேரம் வரும்போது சசிகலாவைச் சந்திப்பதாக ஓ.பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறார்.
அந்த நேரம்வரும்போது உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் அவர் சந்திப்பார். இதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
அதிமுக அலுவலகத்தில் யாரையும் அனுமதிக்கக்கூடாது – டிஜிபியிடம் ஓபிஎஸ் புகார்