எங்கள் எம்ஜிஆருக்கு சசிகலா மாலை போடக்கூடாது: எடப்பாடி தரப்பு போலீசில் புகார்!

Published On:

| By Aara

சேலம் ஈரோடு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் சசிகலா.

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையிலான அதிகார மோதல் நீதிமன்றத்தில் அப்பீல்  போராட்டமாகவும் கட்சியளவில் ஆதரவாளர்களை இழுக்கும் போராட்டமாகவும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்…

நான் தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று உரிமை கொண்டாடி சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார் சசிகலா.

இந்த நிலையில் செப்டம்பர் 11ஆம் தேதி தனது சேலம் பயணத்தை திட்டமிட்ட சசிகலா,  இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் காரணமாக இந்திய அரசு அன்று ஒரு நாள் துக்கம் அனுசரித்ததால், அந்தப் பயணத்தை ஒருநாள் தள்ளி வைத்து இன்று செப்டம்பர் 12 புறப்படுகிறார்.

தஞ்சையில் இருந்து புறப்பட்டு பெரம்பலூர், வேப்பூர் கூட்ரோடு வழியாக இன்று மாலை  சேலம் மாவட்டம் தலைவாசலை வந்தடைகிறார் சசிகலா.

 இந்த நிலையில் தான்   செப்டம்பர் 11ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக நகர செயலாளர் மோகன் ஆத்தூர் போலீஸ் டிஎஸ்பியிடம் ஒரு மனுவை கொடுத்திருக்கிறார்.

அதில், “ஆத்தூர் சாரதா ரவுண்டானா அருகில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் திருவுருவச் சிலை உள்ளது.

அதேபோல ஆத்தூர்  க்ரைன் பஜார் அம்மா உணவகம் அருகில் எம்ஜிஆர் முழு உருவச் சிலை உள்ளது. இந்த இரு சிலைகளும் சிலையில் உள்ள பீடமும் எனது சொந்த செலவில் அமைக்கப்பட்டதாகும்.

1995 ஆம் ஆண்டு சிலை நிறுவப்பட்ட நாளிலிருந்து இதுவரை இந்த இரு சிலைகளையும் நானே எனது சொந்த பராமரிப்பில் பராமரித்து வருகிறேன். அதேபோல இந்த இரு சிலைகளுக்கும் எனது தலைமையில் மட்டுமே இன்றுவரை மாலை மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுகவுக்கு சிறிதும் தொடர்பில்லாத சசிகலா என்பவர் இந்த எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளதாக தெரிய வருகிறது.

எனது சொந்த செலவில் அமைக்கப்பட்ட இந்த இரு எம்ஜிஆர் சிலைகளுக்கு சசிகலாவை மாலை அணிவிக்க நிச்சயம் அனுமதிக்க மாட்டோம். இந்த செய்தி அதிமுகவினர் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதித்தால் நிச்சயம் ஆத்தூர் நகரில் கலவரம் நடக்க வாய்ப்பு உள்ளது ‌

எனவே சிலையை சேதப்படுத்தும் நோக்கத்தோடும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பேன் என்று அதிமுகவுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத சசிகலாவின் செயலை அனுமதிக்க கூடாது” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் அதிமுக ஆத்தூர் நகர செயலாளர் மோகன்.

இவர் மட்டுமல்ல ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக எம்எல்ஏவான ஜெய்சங்கரனும் ஆத்தூர் டிஎஸ்பியிடம் ஒரு மனு கொடுத்துள்ளார்.

அதில்,  “ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் நகராட்சியில் ராசிபுரம் பிரிவு சாலையில் எம்ஜிஆர் முழு உருவச்சிலை உள்ளது. இந்த சிலை எனது சொந்த செலவில் அமைக்கப்பட்ட சிலை.

இதுநாள் வரை நானும் அதிமுக நிர்வாகிகள் மட்டுமே இந்த சிலைக்கு மாலை மரியாதை செய்து வந்தோம். இந்த நிலையில் அதிமுகவுக்கு சிறிதும் தொடர்பு இல்லாத சசிகலா என்பவர் செப்டம்பர் 12ஆம் தேதி எனது சொந்த செலவில் அமைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வர இருப்பதாக கேள்விப்பட்டேன்.

இதை நானோ எனது கட்சியினரோ அனுமதிக்க மாட்டோம். எந்த ஒரு பிரச்சினையும் கலவரமும் இல்லாமல் அமைதியாக இருக்கும் எனது சட்டமன்றத் தொகுதிக்குள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் சசிகலா முயற்சிப்பதாக தெரிகிறது.

பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுகிற வகையில் செயல்படும் சசிகலாவின் செயலுக்கு அனுமதி அளிக்காமல் அமைதியை நிலைநாட்ட கேட்டுக்கொள்கிறேன்” என்று ஆத்தூர் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் ஜெயசங்கரன் போலீஸிடம் இன்னொரு மனு அளித்துள்ளார்.

எம்ஜிஆர் சிலைகள் அதிமுக நிர்வாகிகளின் சொந்த சிலைகள் என்றும் அவற்றுக்கு சசிகலா மாலை அணிவித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் போலீஸ் வரை சென்று புகார் அளித்திருப்பது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் புகார் மனு பற்றி நாம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜெயசங்கரனை தொடர்பு கொண்டு பேசினோம்.”நான் ஒரு கல்யாண வீட்டில் இருக்கேன் அப்புறம் பேசுகிறேன்” சொல்லிவிட்டார்.

அதிமுகவின் ஆத்தூர் நகரச் செயலாளர் மோகனிடம் சசிகலாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட இந்த புகார் பற்றி பேசினோம்.

“சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று உறுதிப்படுத்தி தீர்ப்பளித்து இருக்கிறது. எனவே இப்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி அவர்கள் தான்.

இந்த நிலையில் தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று சொல்லிக்கொண்டு  சேலம் மாவட்டத்திற்குள் இருக்கும் எம் ஜி ஆர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தால்…

சசிகலாவை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும். அவர் வேண்டுமானால் தனிப்பட்ட சசிகலாவாக அம்மாவின் தோழி சசிகலாவாக எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கலாம். ஆனால் இப்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருக்கும் நிலையில்…

அதே பதவியை பொறுப்பை தான் வகிப்பதாக கூறிக்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சரியில்லை. அதனால்தான் ஜனநாயக முறைப்படி எங்கள் எதிர்ப்பை  காவல்துறையிடம் மனு அளித்துள்ளோம்” என்ற நகரச் செயலாளர் மோகனிடம், ” இந்த மனுக்களை நீங்களாகவே கொடுத்தீர்களா? அல்லது எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின் பேரில் கொடுத்தீர்களா?” என்று கேட்டோம்.

“இந்தப் புகார் மனு கொடுத்தது கூட பொதுச் செயாலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாது. இது போன்ற செய்திகள் வந்தால் தான் தெரியும். யாரும் எங்களை தூண்டவில்லை” என்று பதிலளித்தார் ஆத்தூர் நகர செயலாளர் மோகன்.

சேலம் மாவட்டத்தில் சசிகலா பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், அதிமுக நிர்வாகிகள் காவல்துறையிடம் அளித்திருக்கும் இந்த புகார்கள் பற்றி சேலம் மாவட்டத்தின் தீவிர சசிகலா ஆதரவாளரும் இந்த பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பவருமான எடப்பாடி சுரேஷிடம் பேசினோம்.

“எடப்பாடி பழனிச்சாமி அவரது ஆதரவாளர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர் எந்த தனி நபருக்கும் சொந்தமானவர் கிடையாது. அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்தவர்.

அதிமுகவை நிறுவியவர். அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனுக்கும் உரியவர் எம்.ஜி.ஆர்.  இன்று எடப்பாடி பழனிசாமி அதிகார வெறியில் எம்.ஜி.ஆரையே சொந்தம் கொண்டாடும் நிலைக்கு சென்றிருக்கிறார். 

எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க கூடாது என்று யாரையும் தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி இன்னமும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவே இருப்பது போல அவரது ஆதரவாளர்கள் கற்பனை செய்து கொண்டு நெடுஞ்சாலைகள் எல்லாம் தங்களுக்கு சொந்தம் என்று கூறினாலும் கூறுவார்கள்.

சசிகலாவின் பயணத்திட்டத்தில் எங்கேயும் அவர்கள் வேனை விட்டு இறங்கும் நிகழ்ச்சி நிரலே இல்லை.  ஆனால் இவர்களின் நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது அவர் இறங்கி எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.  சசிகலா அவர்களின் பயணத்தால் சட்டம் ஒழுங்குக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எடப்பாடி கூடாரத்தின் பயந்தாங்கொள்ளித் தனத்தையே இது காட்டுகிறது” என்கிறார் எடப்பாடி சுரேஷ்.

ஆரா

சசிகலா குறித்த கேள்வி ; நன்றி வணக்கம் கூறி எஸ்கேப் ஆன ஆர்.பி.உதயகுமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel