அரசியல் என்ட்ரி ஆரம்பித்துவிட்டது: சசிகலா பேட்டி!

அரசியல்

என்னுடைய அரசியல் என்ட்ரி ஆரம்பித்துவிட்டது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று (ஜூன் 16) தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த  சசிகலா, “எம்ஜிஆர், ஜெயலலிதா பல்வேறு துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்து அதிமுவை ஒன்றிணைத்து இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கினார்கள்.

ஆனால் இன்றைக்கு அதிமுக தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகிறது. ஒரு சில சுயநலவாதிகள் தான் இதற்கு காரணம். இவை அனைத்தையும் நான் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

அனைவரிடமும் விட்டுக்கொடுத்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று எம்ஜிஆர் அடிக்கடி என்னிடம் சொல்லியிருக்கிறார். அப்படியே பழக்கப்பட்டு வந்துவிட்டேன்.

எனக்கென்று சொந்த ஊர், சொந்த சாதி கிடையாது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சாதி பார்த்தது கிடையாது. இப்போது அதிமுகவில் இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதி அரசியலுக்குள் செல்கிறார்கள். அவர்கள் சாதி அரசியல் செய்ய வேண்டும் என்றால் தனியாக சாதி அமைப்புகள் தொடங்கலாம்.

ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தில் சாதி அரசியல் செய்வதை யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். நான் சாதி பார்த்திருந்தால் பெங்களூரு சிறைக்கு செல்லும் போது எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் முதல்வர் பதவியை கொடுத்திருக்க வேண்டும்.

மேற்கு மாவட்ட மக்கள் எம்ஜிஆருக்கு  தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தனர். அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தான் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவி கொடுத்தேன்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கும், நான்காவது இடத்திற்கும் சென்றுள்ளது. டெபாசிட் இழந்துள்ளது.

அதிமுக முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். இப்போது நல்ல நேரம் வந்துவிட்டது

ஏனென்றால் என்னுடைய அரசியல் என்ட்ரி ஆரம்பித்துவிட்டது. என் பின்னால் அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் இருக்கிறார்கள். நிச்சயமாக 2026-ஆம் ஆண்டு தனிப்பெரும் கட்சியாக அதிமுக தமிழகத்தில் ஆட்சியமைக்கும்.

தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். திமுகவின் சலசலப்புகள் என்ன ஆகப்போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். திமுகவின் கோரப்பிடியில் இருந்து தமிழக மக்களை காக்க வேண்டும் என்றால் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும்” என்று சசிகலா தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இவிஎம் மெஷின் பாதுகாப்பானதா? எலான் மஸ்க் – ராஜீவ் சந்திரசேகர் இடையே வார்த்தைப் போர்!

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை: வானிலை மையம் அப்டேட்!

+1
2
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *