தை மாதத்துக்குள் அதிமுக ஒன்றுபட்டு விடும் என்று சசிகலா தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று உரிமை கொண்டாடும் சசிகலா இன்று (அக்டோபர் 1) சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்கள் சுமார் இருநூறு பேருடன் ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்.
இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே இதுகுறித்த செய்தியை மின்னம்பலத்தில் காலை வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் காலை 10.30 மணியில் இருந்தே தமிழகம் முழுவதிலும் இருந்தும் சசிகலாவின் இல்லத்தை நோக்கி அவரது ஆதரவு அதிமுக புள்ளிகள் கூட ஆரம்பித்தனர்.
11.15 மணியில் இருந்து அனைவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசிய சசிகலா, அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அதன் பின் 12.20 மணிக்கு அனைவர் முன்னிலையிலும் பேசினார் சசிகலா.
அப்போது அவர், “என்னை சந்திக்கவேண்டும் என தினந்தோறும் பலரும் கடிதம் எழுதியும் என் பிஏவிடம் போன் மூலமும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதனால்தான் உங்களை எல்லாம் இன்று வரவழைத்துள்ளேன். இன்று உங்களை நான் சந்திப்பதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது.
தலைமைக் கழக பேச்சாளர்களை கைவிட்டுவிட்டார்கள்
வரும் அக்டோபர் 17 ஆம் தேதி நம் புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவி அம்மாவும் சிறப்பாக நடத்திய அதிமுகவின் நிறுவன நாள் விழாவை நாம் சிறப்பாக கொண்டாடணும். அதற்காக ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு நான் செல்கிறேன். தமிழகம் முழுதும் நாம் சிறப்பாக கட்சியின் நிறுவன நாள் விழாவை கொண்டாடவேண்டும்.
அம்மா இருக்கும்போது தீபாவளி, பொங்கல், மற்றும் விசேஷங்களுக்கு தலைமைக் கழகப் பேச்சாளர்களுக்கெல்லாம் பணமோ பரிசோ கொடுப்போம். அம்மா இறந்த பிறகு, நான் சிறை சென்ற பிறகு, கட்சி சில தனி நபர்களின் பிடியில் சென்றபிறகு தலைமைக் கழக பேச்சாளர்கள், ஏழை நிர்வாகிகளை கண்டுகொள்ளவே இல்லை. நான் சிறையில் இருந்து வந்தபிறகு இடையில் கொரோனா ஊரடங்கால் அதைத் தொடர முடியவில்லை.
இப்போது அக்டோபர் 17 ஆம் தேதியன்று ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலைமைக் கழக பேச்சாளர்கள், மற்றும் மூத்த நிர்வாகிகளை நாம் பரிசளித்து கௌரவிக்க இருக்கிறோம்,
நிதியுதவி மற்றும் தையல் மிஷின் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறோம். எனவே அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலைமைக் கழக பேச்சாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பட்டியலை தயாரித்து அவர்களை அழைத்து வாருங்கள்” என்று பேசிய சசிகலா தொடர்ந்தார்.
என்னோடு பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்
“எல்லாரும் என்ன நினைக்கிறீங்கனு தெரியும். ஒரு கவலையும்படாதீங்க. நல்லதே நடக்கும். இப்பவே என்கூட நிறைய பேர் பேசிக்கிட்டுதான் இருக்காங்க. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்சி.சம்பத், வீரமணி, பச்சைமால்னு நிறைய பேர் தொடர்புலதான் இருக்காங்க. நான்தான் பொறுமையா இருங்கனு சொல்லியிருக்கேன். ஓபிஎஸ்சும் நம்ம கூடதான் இருக்காங்க.
இது நம்ம குடும்பம்… பழசெல்லாம் மறக்கணும். யாரும் அவர் அணி, இவர் அணினு பிரிச்சு பேசக் கூடாது. எல்லாரையும் நாம அனுசரிச்சு போகணும். நான் யாரையும் எதிரியா பாக்கல. எல்லாரும் ஒண்ணா சேரணும்னும்னுதான் முயற்சி எடுத்துக்கிட்டிருக்கேன்.
ஆனா எல்லாரும் ஒண்ணா ஆனபிறகும் அஞ்சு பேர் மட்டும் என்கூட வர மாட்டாங்க, வர்றதுக்கு தயங்குவாங்க. ஆனா அவங்களும் அதுக்கப்புறம் நம்மகிட்டயே வந்துடுவாங்க. அதனால யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். வர்ற தை மாசம் அதிமுக ஒண்ணாகிவிடும். என்னை நம்புங்க” என்று சொல்லி பேச்சை முடித்திருக்கிறார் சசிகலா.
புரட்டாசி சனிக்கிழமை என்பதால் அனைவருக்கும் சைவ விருந்து பரிமாறப்பட்டது. எல்லாரையும் சாப்பிட வைத்து அனுப்பி வைத்தார் சசிகலா.

அந்த ஐந்து பேர்
பேசும்போது சசிகலா, “எல்லாரும் வந்த பிறகும் அந்த அஞ்சு பேர் மட்டும் வர தயங்குவாங்க” என்று குறிப்பிட்டாரே, அந்த ஐந்து பேர் யார் என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் கேட்டோம்.
“எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகிய ஐந்து பேர்தான் முதலில் சசிகலாவோடு வரத் தயங்குவார்கள். பிறகு அவர்களும் வந்துவிடுவார்கள்” என்று கூறினார்கள் அவர்கள்.
அக்டோபர் 17 அதிமுகவின் நிறுவன நாள் முடிந்து, அடுத்தகட்ட சுற்றுப் பயணத்தையும் நடத்த இருக்கிறார் சசிகலா என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
தைமாசம் அதிமுக ஒன்றாகிவிடுமென்ற சசிகலாவின் புரட்டாசி நம்பிக்கை பலிக்குமா, பொறுத்திருந்து பார்ப்போம்!
-வணங்காமுடிவேந்தன்
சாதாரண இந்து -சனாதன இந்து: வட இந்தியாவை வியக்கவைக்கும் ஆ.ராசா பேச்சு!
மேயரைப் பற்றி ஆபாச வீடியோக்கள்: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
cv shanmugam illa.. munusamy