சசிகலா சுற்றுப்பயணம் : நெல்லை அதிமுகவினர் போலீஸில் புகார்!
நெல்லையில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில் அவர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்று போலீஸில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 17ஆம் தேதி தொடங்கி தென்காசி மாவட்டத்தில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களைச் சந்தித்து பேசினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா.
சசிகலாவின் ஆடி டூர்…செல்லுபடியா? தள்ளுபடியா? தென்காசியை செலக்ட் பண்ணிய பின்னணி என்ன?
2026ல் அதிமுக ஆட்சிக்கு வரும், விரைவில் அதிமுகவை ஒன்றிணைப்பேன் என்று கூறி வரும் சசிகலா இந்த மாதம் நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நாளை மாலை நெல்லை வரும் அவர் 18ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருநெல்வேலி, நாங்குநேரி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்லும் அவர் தனது ஆதரவாளர்களையும், மக்களையும் சந்திக்கவுள்ளார்.
அவரது வருகையை முன்னிட்டு நெல்லையில் பல்வேறு பகுதிகளிலும் அதிமுக கொடிகள், இரட்டை இலை சின்னம் மற்றும் சசிகலா புகைப்படத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அவரை வரவேற்க அலங்கார வளைவுகள், போஸ்டர்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று நெல்லை அதிமுகவினர் எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 12) திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தச்சை. கணேச ராஜா தலைமையில் அதிமுகவினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த கணேச ராஜா, “சசிகலா இங்கு வருவதை முன்னிட்டு அதிமுகவின் கொடிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னம் அடங்கிய பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட சசிகலாவுக்கு அதிமுக கொடியையோ சின்னத்தையோ பயன்படுத்த உரிமையோ, அங்கீகாரமோ இல்லை.
உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்குதான் உரிமை இருக்கிறது. கொடியும் சின்னமும் எங்களுக்குத்தான் சொந்தம்.
இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். அந்த மனுவை பரிசீலிப்பதாக கூறியுள்ளனர்.
சட்டப்படி அந்த கொடி, பதாகைகளை அவர்கள் விலக்கி வைக்க வேண்டும்.
காவல்துறை செய்யத் தவறினால் அதிமுகவினர் செய்ய வேண்டிய நிலை வரும். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். அதனை பாதுகாக்க தவறிய குற்றம் காவல்துறையையே சேரும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக தென்காசியில் சசிகலா பயணம் மேற்கொண்ட போது அதிமுக கொடி கட்டவும், சின்னத்தை பயன்படுத்தவும் சசிகலாவுக்கு போலீஸ் எந்த தடையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
”கொஞ்சம் பொறுங்கப்பா”: விஜய் ரசிர்களுக்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்!
“யார் அதிக பணிகளை செய்தது” : கோவை ஆத்துபாலம் குறித்த வேலுமணியின் கருத்துக்கு எ.வ.வேலு பதிலடி!