அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று இன்னமும் உரிமை கொண்டாடி வரும் சசிகலா, இன்று (அக்டோபர் 1) காலை 11.30 மணியளவில் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருநூறுக்கும் அதிகமான தனது முக்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்துகிறார்.
அதிமுகவில் தனக்குள்ள உரிமையை நிலைநாட்டுவதற்கு பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்து வரும் சசிகலா… சீரிய இடைவேளைகளில் சில மாவட்டங்களை ஒருங்கிணைத்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் கூட சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்தார்.
இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 30) உச்ச நீதிமன்றத்தில் அதிமுகவின் பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில்,
இது தொடர்பான அனைத்து மேல் முறையீடுகளையும் நவம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
மேலும், அதுவரை அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது என்று பன்னீர் தரப்பு வைத்த கோரிக்கைக்கு, அதுவரை பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என்று எடப்பாடி தரப்பு உச்ச நீதிமன்றத்திடம் உறுதியளித்துள்ளது.
இந்தப் பின்னணியில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அதிமுக கொறடா நரசிம்மன்,
முன்னாள் அமைச்சர் ஆனந்தன், வேலூர் வாசு, திண்டிவனம் ஷெரிப் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கிறார்கள்.
இந்த ஆலோசனையில் சசிகலா தனது அடுத்தகட்ட திட்டங்களைப் பற்றி விவாதிக்க இருக்கிறார் என்கிறார்கள்.
அக்டோபர் 17 ஆம் தேதி அதிமுகவின் நிறுவன நாளாகும், அதாவது 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதிதான் எம்ஜிஆர் அதிமுகவை முறைப்படி துவக்கினார்.
அதிமுகவின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் சசிகலா.
இதற்காக அதிமுக அலுவலகம் செல்வது குறித்தும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் அதிமுகவின் நிறுவன விழா கொண்டாட்டங்களைத் தொடக்கி வைத்து அதை தமிழ்நாடு முழுதும் நடத்துவது குறித்தும் இன்று ஆலோசனை செய்கிறார் சசிகலா என்று தெரிவிக்கிறார்கள் அவர்களது வட்டாரங்களில்.
-வணங்காமுடி வேந்தன்
அண்ணாமலை திடீர் அமெரிக்க பயணம் ஏன்?
“இனிமேல் வேகமாக பைக் ஓட்ட மாட்டேன்” : டிடிஎஃப் வாசன்