Sasikala-Edappadi compromise

டிஜிட்டல் திண்ணை: சசிகலா-எடப்பாடி சமாதானமா… அதிமுகவில் என்ன நடக்கிறது?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பேட்டியின் வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட, ஓ.பன்னீர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜூலை 11-2022 பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்டு 25 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பையடுத்து அதிமுகவினர் இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்.

அந்த வகையில் சேலத்தில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு தொண்டர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். அப்போது செய்தியாளார்களிடம் பேசினார்.

‘அதிமுக பொதுக்குழு பற்றி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதிக்கும் தர்மத்துக்கும் கிடைத்த வெற்றி’ என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, ‘அதிமுக மிக உறுதியாக ஒன்றாக இருக்கிறது. எனவே அதிமுக பிரிந்திருக்கிறது, பிளவுபட்டிருக்கிறது என்றெல்லாம் இனிமேல் எழுதாதீங்க’ என்று ஊடகங்களைக் கேட்டுக் கொண்டார்.

அதுமட்டுமல்ல… முதல் நாள் ஆகஸ்டு 24 ஆம் தேதி கொடநாடு வழக்கு குறித்து ஜெயலலிதாவின் டிரைவராக இருந்து ஆத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் கொடுத்த பேட்டி குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது டென்ஷனாகிவிட்டார் எடப்பாடி.
‘இப்படியெல்லாம் கேள்வி கேட்பதே தவறு, சாலையில் போகிறவன் வருபவனுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. இன்னும் ஒரு முக்கியமான விஷயம் அந்த நபர் அம்மாவின் டிரைவர் கிடையாது. திருமதி சசிகலா அம்மாவின் டிரைவர்’ என்று மீண்டும் மீண்டும் சொன்னார் எடப்பாடி பழனிசாமி.

கொடநாடு விவகாரத்தை விட சசிகலாவை பற்றி எடப்பாடி பழனிசாமி சொன்ன இந்த வார்த்தைத்தான் அதிமுகவின் அனைத்து கூடாரங்களிலும் தற்போது விவாதமாக இருக்கிறது. சமீப காலங்களில் சசிகலாவை பற்றி கடுமையாக விமர்சித்தவர் எடப்பாடி.  ஒரு காலகட்டத்தில் சசிகலாவைப் பற்றி கேட்டபோது, ‘சூரியனைப் பார்த்து ஏதோ குரைத்தது போல’ என்ற சொற்றொடரை எல்லாம் பயன்படுத்தி தன் கோபத்தை வெளிப்படுத்தியவர் எடப்பாடி.

அப்படிப்பட்டவர், ‘திருமதி சசிகலா அம்மா’ என்று சொல்லியிருப்பதுதான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சசிகலா மீது திடீரென சாஃப்ட் கார்னர் போல எடப்பாடி பயன்படுத்தியிருக்கும் இந்த வார்த்தைக்குப் பின்னணி பற்றி சேலம் அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது சில முக்கியத் தகவல்கள் கிடைத்தன.

‘மதுரை மாநாட்டை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் எடப்பாடி. மதுரை மாநாட்டில் முக்குலத்து மக்கள் கலந்துகொள்ளக் கூடாது என்று ஓபிஎஸ் -டிடிவி கூட்டணி போட்டு பல்வேறு முயற்சிகளை செய்தனர். எடப்பாடி முக்குலத்து சமுதாயத்துக்கு எதிரானவர் என்ற கருத்துருவாக்கத்தை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

ஆனால் சசிகலாவோ தான் சிறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்து அதிமுகவின் எந்த தனி நபருக்கும் ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ பேசியதில்லை. மேலும் அதிமுகதான் எனது கட்சி, இரட்டை இலைதான் எனது சின்னம் என்றும் தெரிவித்து வருகிறார். மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக… தான் பொதுவாழ்வில் இருந்து விலகுவதாகவும், ஆனாலும் அம்மா கண்ட அதிமுக வெற்றிபெற வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

அதேநேரம் டிடிடி-ஓபிஎஸ் ஆகியோர் இணைந்தபோதும் அவர்களை சசிகலா வெளிப்படையாக இதுவரை ஊக்குவிக்கவில்லை. தஞ்சாவூரில் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் ஓபிஎஸ், டிடிவி கலந்துகொண்டபோது கூட சசிகலா கலந்துகொள்ளவில்லை.

இந்த பின்னணியில் வேலுமணி உள்ளிட்ட சிலர் எடப்பாடியிடம், ‘முக்குலத்து சமுதாயத்துக்கு எதிரானவர்கள் நாம் என்ற பிம்பத்தை உடைக்க சசிகலாவை நாம் ஏன் இணைத்துக் கொள்ளக் கூடாது. அவர் பொதுச் செயலாளர் என்ற சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும் இதுவரை கள ரீதியாக நம்மை எதிர்த்து எதுவும் செய்யவில்லை. அம்மாவின் கட்சியே என் கட்சி என்று சொல்லி வருகிறார். இப்போதைய நிலையில் முக்கிய பொறுப்புக்கும் அவர் ஆசைப்பட மாட்டார். ஒருவேளை அவர் ஆசைப்பட்டால் கூட அவைத் தலைவர் அல்லது கௌரவ ஆலோசகர் என்ற பதவியைக் கொடுத்து அவரை நாம் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் முக்குலத்து எதிர்ப்பு என்று நம் மீது விழுந்திருக்கும் முத்திரை சுக்கு நூறாக உடையும்’ என்று யோசனை சொல்லியிருக்கிறார்கள்.

மேலும் சசிகலா தரப்பில் இருந்து வரும் தகவல்படி அதிமுக அலுவலகத்திலோ அல்லது வேறுபொது இடத்திலோ எடப்பாடியை சந்திக்கவும் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி இதையெல்லாம் கேட்டுக் கொண்டாலும்… சசிகலாவை அனுமதித்தால் ஓபிஎஸ், டிடிவி ஆகியோரும் அடுத்தடுத்து அதிமுகவுக்குள் வரும் சூழல் ஏற்பட்டுவிடுமோ…சசிகலாவுக்கு என்று தனி கோஷ்டி உண்டாகிவிடுமோ என்றெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறார். இது ஆலோசனை அளவில் இருக்கிறது.

இந்த நிலையில்தான் ஆகஸ்டு 25 ஆம் தேதி சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் சசிகலா பற்றி குறிப்பிடும்போது, ‘திருமதி சசிகலா அம்மா’ என்று குறிப்பிட்டிருக்கிறார். வார்த்தை பிரயோகத்தில் எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் சசிகலா- எடப்பாடி சமாதானத்தின் அறிகுறியாக இருக்குமோ என்ற பேச்சு சேலத்தில் இருந்தே தொடங்கியிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

குடியரசு தலைவர் ஆட்சி: பஞ்சாப் அரசுக்கு ஆளுநர் எச்சரிக்கை!

கைது வாரண்ட்: ஜி20 மாநாட்டில் புதின் பங்கேற்க மாட்டார்!

+1
3
+1
7
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *