பன்னீர் மகன் நீக்கம்: எடப்பாடிக்கு சசிகலா கண்டனம்!

அரசியல்

அதிமுகவின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரை கட்சி சார்பாக செயல்படவிடாமல் எடப்பாடி பழனிசாமி தடுப்பதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நாள் முதல் (ஜூலை 11) ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் குமாரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த அறிவிப்பின் அடிப்படையில், ஓ.பி.ரவீந்திரநாத் குமார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், அவர் அதிமுகவில் இல்லை என சுட்டிக்காட்டி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில், கட்சியில் இருந்து ஓ.பி.ரவீந்திரநாத் குமாரை நீக்கியதால், அவரை அதிமுக. எம்பியாக கருத வேண்டாம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
சசிகலா அறிக்கை
இந்த நிலையில் அதிமுகவிலிருந்து ஓ.பி.ரவீந்திரநாத் குமார் நீக்கப்பட்டதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (ஜூலை 22) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அதிமுக தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துவருகிறது. இதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், தன்னுடைய சுயநலத் தேவைகளை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு ஒரு சிலர் செயல்படுவதால், மேலும் அதிமுக அழிவை நோக்கிச் செல்கிறது. அந்த, ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் எண்ணத்தில் அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் நம்பிக்கைகளையும் அனைவரிடத்திலும் விதைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். தவிர தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் ஏமாற்றுகின்றனர்.

குறிப்பாக, கட்சியின் நலனை காற்றில் பறக்க விட்டுவிட்டு, எடுத்த தவறான முடிவுகளால்தான் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அத்துடன் கட்சியின் அங்கீகாரமும் வலுவிழந்திருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவின் சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு மக்களவை உறுப்பினரை கட்சியைவிட்டே நீக்கியிருப்பதை, கழகத் தொண்டர்கள் ஒரு அநியாயமான செயலாகத்தான் பார்ப்பார்களே தவிர, அறிவார்ந்த செயலாக பார்க்கமாட்டார்கள்.

தொண்டர்கள் பார்க்கிறார்கள்

இப்படி தனக்கு வேண்டாதவர்களை நீக்குபவர்களா, அதிமுகவுக்கு நல்லது செய்யப் போகிறார்கள்? அதிலும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்பவர்களை தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? தன் சொந்த விருப்பத்துக்காக, நாடாளுமன்றத்தின் மக்களவையில் அதிமுகவின் அங்கீகாரத்தையே அழிப்பதை எந்த தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒரு மரத்தின் உச்சியில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுகிற வேலையை செய்வது எந்த அளவுக்கு, அறிவற்ற செயலோ, அதுபோன்று அவர்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தொண்டர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
தொண்டர்களே, அதிமுக அழிந்தாலும் பரவாயில்லை. எப்படியாவது பதவிகளைத் தட்டிப் பறிக்க வேண்டும் என்று தாண்டிக் குதிப்பவர்களை எண்ணி யாரும் சிறிதும் கவலைப்படாதீர்கள். அவர்கள் எண்ணம் தவறானது. கட்சிக்கு எதிரானது என்பது வெளிப்படுகிற காலம் வந்துவிட்டது. விரைவில், உண்மையான தொண்டர்களின் பேராதரவோடு அதிமுக செழிக்கும்” என அதில் தெரிவித்துள்ளார் சசிகலா.

ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *