“மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா பயனற்றது” – காரணம் சொல்லும் சசிகலா

அரசியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 65-ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில், கள்ளச்சாராயம் காய்சி விற்பவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதமும், ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மதுவிலக்கு தடை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

"Even though it was a loksabha election, the opposition parties targeted me" : MKStalin

தமிழக சட்டமன்றத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்துள்ள மதுவிலக்கு சட்டத்தை திருத்தி தாக்கல் செய்திருப்பது பயனற்றது என்று ஜெயலிதாவின் தோழி சசிகலா இன்று (ஜூன் 29) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா நாடகம்!

சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு தடை சட்ட திருத்தம் என்பது பழைய பாத்திரத்திற்கு புதியதாக முலாம் பூசியிருப்பது போல் தோன்றுகிறது. இதனால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் தற்போது வரை 65 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பழியை தவிர்ப்பதற்காக திமுகவினர் சட்டத்திருத்தம் கொண்டு வந்து நாடகம் ஆடுவது மிகவும் கண்டனத்திற்குரியது.

அதாவது, தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை தயாரிப்பது, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி சட்டத் திருத்தத்தை அமைச்சர் முத்துசாமி இன்றைக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

அதாவது ஏற்கனவே நடைமுறையில் உள்ள தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், 1937ல், மதுவகை அல்லது மதி மயக்கும் மருந்தினை தயாரிக்க, கொண்டு செல்ல வைத்திருக்க மற்றும் நுகர்வுக்கு தடை என்ற  பிரிவு 4ல், அதனை அருந்துவதால் மரணம் ஏற்பட்டிருந்தால், ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறை மற்றும் ரூபாய் ஐந்தாயிரத்திற்கு குறையாத தண்டனைத்தொகை விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்ற ஷரத்துகள்  ஏற்கனவே மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அதே ஆயுள்தண்டனையைத்தான் தற்போது மீண்டும் சொல்லி சட்ட திருத்தம் செய்துள்ளதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உண்மைநிலை இவ்வாறு இருக்க ஏதோ தாங்கள் கடினமான நடவடிக்கை எடுத்துள்ளது போன்று ஒரு மாய பிம்பத்தை கட்டமைக்க திமுகவினர் முயற்சி செய்கிறார்கள்.

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் திமுக ஆட்சியில் இருக்கும் வரை நடக்கவே நடக்காது என்பதுதான் நாடறிந்த உண்மை.

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப்பொருள்  நடமாட்டம்!

தமிழகத்தில் இன்றைக்கு கஞ்சா மற்றும் வினோதமான புதுவடிவில் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. இதன் காரணமாக எங்குபார்த்தாலும் வன்முறைகளும் சட்டமீறல்களும் தலைவிரித்து ஆடுகிறது.

தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது. திமுக தலைமையிலான அரசின் அலட்சியத்தால் இன்றைக்கு தமிழகத்தில் பாதுகாப்பற்ற ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றிட நம்மிடம் இருக்கின்ற சட்டதிட்டங்களை சரியாக பயன்படுத்தினாலே எந்தவித தவறுகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளமுடியும். ஆனால் திமுகவினரால் அதை எந்த காலத்திலும் செய்ய முடியாது.

காவல்துறை சரியாக செயல்படவேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக ஆட்சியாளர்கள் காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆளும்கட்சியினரே இன்றைக்கு அனைத்து வித சட்டமீறல்களையும், அராஜகங்களையும் அரங்கேற்றும்போது, காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு என்ன செய்யமுடியும்?

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றிட ஆட்சியாளர்கள் திறமையாக இருக்க வேண்டும். இதே சட்டதிட்டங்களை பயன்படுத்திதானே ஜெயலலிதா தமிழகத்தில் இத்தனை ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்.

ஜெயலலிதா ஆட்சிகாலங்களில் கள்ளச்சாரயத்தால் ஒரு உயிர் கூட பலியானது இல்லையே. எனவே, திமுகவினர் தமிழக மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு அவர்களின் நலனுக்காக பாடுபடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பட்டாசு ஆலை வெடி விபத்து… உயிரிழந்த 4 பேருக்கு தலா ரூ.3 லட்சம்!

“ரவுடி சீர்காழி சத்யாவுக்கு அரணாக இருந்த பாஜக” – லிஸ்ட் போட்ட செல்வப்பெருந்தகை

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *