அரசியலில் சில சம்பவங்கள், நிகழ்வுகள் கோ இன்சிடென்ட்ஸ் ஆக அதாவது ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதது போல் தோன்றினாலும் சம்பந்தம் உள்ளதாகவே நடந்துவிடும்.
அதுபோலத்தான் இன்று (ஆகஸ்டு 17) அதிமுக பொதுக்குழு பற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்திருக்க, நாளை ஆகஸ்டு 18 சசிகலாவின் பிறந்தநாளும் வருகிறது.
அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று இன்று வரை சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் வி.கே. சசிகலா நாளை ஆகஸ்டு 18 ஆம் தேதி 67 வயது முடிந்து 68 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்த நிலையில்தான் நேற்று ஆகஸ்டு 16 ஆம் தேதி அவர் விடுத்த வேண்டுகோளில், “எனது பிறந்த நாளன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து எனக்கு கோரிக்கை வருவதை அறிந்து கொண்டேன். உங்களுடைய அன்புக்கு தான் என்றைக்குமே அடிமை.
உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. அதே சமயத்தில், நான் விரைவில் உங்களையெல்லாம் நேரில் வந்து சந்திக்க, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வர இருக்கிறேன். நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களையெல்லாம் நான் காண இருக்கிறேன் உங்களோடு நேரில் உரையாட இருக்கிறேன்.
ஆகையால், தற்சமயம் எனது பிறந்தநாளுக்காக, நீங்கள் சிரமப்பட்டு, பயணித்து எனது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் கண்முன்னே இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு, உங்களால் இயன்ற அளவில் நீங்கள் செய்கின்ற உதவிகளையே, எனக்கு நீங்கள் அளிக்கின்ற, சிறந்த பிறந்தநாள் பரிசாக, மனதார ஏற்றுக்கொள்கிறேன்.
அதுவே, மறைந்த நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசாகவும் எண்ணுகிறேன். என் உயிரினும் மேலான கழகத் தொண்டர்களே, பொறுமையோடு இருங்கள்.
இந்த மண் நம்மை போன்ற நல்லவர்களை, உண்மையானவர்களை, உறுதியானவர்களை, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை எதிர்பார்த்துதான் இன்றைக்கும் காத்து கொண்டு இருக்கிறது. ஆகவே, மண்ணை நேசிப்போம், மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம். வெற்றி நிச்சயம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதிமுகவில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23 ஆம் தேதிக்கு முன் என்ன நிலையோ அதுவே தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
அதாவது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்ற நிலையே சட்டப்படி தொடருகிறது.
தீர்ப்புக்குப் பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் செல்வத்திடம் சசிகலா அதிமுகவில் இணைவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “அதிமுகவில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதிமுகவின் கொள்கைகளுக்கு இசைந்து வருபவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இங்கே அவர் தரப்பு இவர் தரப்பு என்று யாரும் இல்லை. எல்லாரும் ஒரே தரப்புதான்” என்று கூறினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்து வருகிறார் பன்னீர் செல்வம். இந்த நிலையில் இப்போது உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அதிமுகவில் பன்னீரின் பலம் மீண்டும் கூடியிருக்கிறது.
இத்தகைய அரசியல் சூழலில் சசிகலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக அவரை நாளை பன்னீர்செல்வம் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இதுவரை ஏற்பட்ட பிரிவுகளை, கசப்புகளை சசிகலாவின் பிறந்தநாளில் இருந்து சரிசெய்துவிடலாம் என்று பன்னீருக்கும் சசிகலாவுக்கும் வேண்டப்பட்டவர்கள் பன்னீரிடம் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனபோதும் தீர்ப்புக்குப் பின் இவ்வளவு சீக்கிரம் வெளிப்படையாக சசிகலாவை நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதா அல்லது போன் மூலம் பேசி வாழ்த்து தெரிவிப்பதா என்ற ஆலோசனை இன்று இரவு வரை பன்னீர் தரப்பில் நடந்து வருகிறது என்கிறார்கள் அவரது வட்டாரத்தில்.
பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா, மகன் ஜெயபிரதீப் ஆகியோர் சசிகலாவை தொடர்ந்து சந்தித்து வருவது குறிப்பிடத் தக்கது.
பன்னீர் சசிகலாவை சந்திக்கிறாரா என்பது முடிவு செய்யப்படாவிட்டாலும் அவர்கள் நாளை சசிகலாவை சந்திப்பார்கள் என்றும் ஓபிஎஸ் கூடாரத்தில் உறுதியாகக் கூறுகிறார்கள்.
–வேந்தன்
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி பறித்த அதிமுகவை சசிகலாவிடம் ஒப்படைப்பேன் -ஓபிஎஸ்